ஈரானுடனான பேச்சுவார்த்தை சிறப்பாக செல்கிறது ஹோர்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரானுக்கு ஏப்.6 வரை காலக்கெடு: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

துபாய்: ஈரான் மீது கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து தாக்குதலை தொடங்கின. இந்த போரானாது இன்று ஒரு மாதத்தை எட்டியுள்ளது. ஈரானின் குடிமக்கள் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஈரான் கடிதம் எழுதி இருந்தது. போர் நிறுத்தத்தை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில் தனது நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் ஆகியோரை படுகொலை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஈரான் குற்றம்சாட்டியிருந்தது.

அது தொடர்பான ஊடக செய்திகளும் அதில் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தன. அத்தகைய எந்தவொரு திட்டத்தையும் அரசு ஆதரவு பயங்கரவாதம் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் நேற்று அதிகாலை தாக்குதல் நடத்தியது. ஈரானின் ஆயுத உற்பத்தி தளங்கள் மீதான தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தப் போவதாக இஸ்ரேல் கூறியதை தொடர்ந்து தெஹ்ரானின் மையப்பகுதியில் உள்ள இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஆனால் என்னென்ன இலக்குகள் தாக்கப்பட்டன என்பது குறித்த உடனடி தகவல் எதுவும் இல்லை.

பெய்ரூட் மீதும் புகை சூழ்ந்தது. எனினும் லெபனான் தலைநகரை தாக்கியதாக இஸ்ரேல் உடனடியாக அறிவிக்கவில்லை. அதே நேரத்தில் ஈரானிய ஏவுகணைகளை இடைமறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஈரான் குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரு நாடுகளிலும் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.

இதற்கிடையே ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்காக ஈரானுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடுவை ஏப்ரல் 6ம் தேதி வரை நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அதுவரை ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகளை தாக்க மாட்டோம் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

* உரத் தட்டுப்பாடு அபாயம்
இஸ்ரேல், அமெரிக்காவின் குண்டுவீச்சுகளுக்கு பதிலடியாக ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால் எரிவாயு விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. உர விநியோகம் குறைந்து வருகின்றது. ஏற்கனவே அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் சீரற்ற வானிலை அமைப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள வளரும் நாடுகளில் உள்ள விவசாயிகள் வாழ்வாதாரத்தை இந்த உரத்தட்டுப்பாடு மேலும் ஆபத்தில் ஆழ்த்துகின்றது.

முக்கிய உர ஊட்டச்சத்துக்களான நைட்ரஜன் மற்றும் பாஸ்பேட் ஆகியவை விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. நடவு பருவம் தொடங்கும் நேரத்தில் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது அடுத்த பருவத்தில் குறைந்த விளைச்சலையும் பயிர் சேதத்தையும் ஏற்படுத்தும்.

Related Stories: