12,076 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு கலெக்டர் தர்ப்பகராஜ் ஆய்வு திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 இடங்களில்

திருவண்ணாமலை, மார்ச் 29: திருவண்ணாமலை மாவட்டத்தில், 12 இடங்களில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெறுகிறது. மேலும், வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ளது. அதையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 2,516 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்கள் 12,076 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், வாக்குப்பதிவுக்கு இன்னும் 24 நாட்களே உள்ளதால், தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதையொட்டி, தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு, முதற்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்தது. திருவண்ணாமலை, செங்கம், போளூர், கலசபாக்கம், தண்டராம்பட்டு, சேத்துப்பட்டு, கீழ்பென்னாத்தூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, வெம்பாக்கம், ஜமுனாமரத்தூர் ஆகிய 12 இடங்களில் தேர்தல் பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மண்டல தேர்தல் அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனர்.

அப்போது, வாக்குப்பதிவின்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், மின்னணு இயந்திரத்தை கையாளும் வழிமுறைகள் குறித்து செயல்விளக்கம் செய்துகாட்டப்பட்டது. மேலும், வாக்குச்சாவடி அலுவலர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு அளிக்கப்பட்டது. மேலும், வாக்குப்பதிவு தொடங்கும் முன்பு, மாதிரி வாக்குப்பதிவை ஏஜென்டுகள் முன்னிலையில் நடந்துவது, உணவு இடைவேளை இல்லாமல் வாக்குப்பதிவு தொடர்ந்து நடத்துதல், வாக்காளர்களை அடையாளம் காணுதல், மின்னணு இயந்திரங்களுக்கு சீல் வைத்தல், வாக்காளர்களின் விபரங்களை உறுதி செய்தல் போன்றவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

அதோடு, வாக்குப்பதிவு விபரங்களை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை மண்டல அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் எதிர்பாராமல் பழுது ஏற்பட்டால் உடனடியாக வாக்குப்பதிவை நிறுத்திவிட்டு உயர் அலுவலர்களுக்கு தகவல் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், திருவண்ணாமலை காந்திநகர் தனியார் மெட்ரிக் பள்ளியில் நடந்த தேர்தல் பயிற்சி வகுப்பை கலெக்டர் தர்ப்பகராஜ் பார்வையிட்டார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவது தொடர்பாக முறையான பயிற்சி பெறுவது அவசியம்.

மேலும், வாக்குச்சாவடியில் பயன்படுத்தும் படிவங்களை முறையாக பூர்த்தி செய்து ஒப்படைப்பது குறித்து வாக்குச்சாவடி அலுவலர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என கலெக்டர் கேட்டுக்கொண்டார். சட்டமன்ற பொதுத்தேர்தல் நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு உண்டு. எனவே, அதை உணர்ந்து தேர்தல் ஆணைய வழிமுறைகளை பின்பற்றி தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும் என்றார். அப்போது, திருவண்ணாமலை தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்டிஓ செல்வம், முதன்மைக் கல்வி அலுவலர் முனிராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) அன்பழகன், தேசிய தகவலியல் மைய அலுவலர் சிசில் இளங்கோ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: