82,000 பேருக்கு வீடு தேடி வரும் ரேஷன் பொதுமக்கள் பயனடைகின்றனர் திருவண்ணாமலை மாவட்டத்தில்

திருவண்ணாமலை, மார்ச் 28: திருவண்ணாமலை மாவட்டத்தில் 82 ஆயிரம் பேரின் வீடு தேடி ரேஷன் பொருட்கள் சென்றடைகிறது. இதனால் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி முதல் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள விளிம்பு நிலை மக்களுக்கு வீடு தேடிச்சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைபாடு காரணமாக நியாய விலைக்கடைகளுக்கு நேரில் வர இயலாதவர்களுக்கு, அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்குவதே இதன் முதன்மை நோக்கமாகும். முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, சர்க்கரை போன்ற பொருட்கள் இல்லத்திலேயே வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. இதற்கான விநியோக வாகனங்களில் மின்னணு எடை இயந்திரங்கள் மற்றும் இ-பிஓஎஸ் கருவிகள் மூலம் துல்லியமான விநியோகம் உறுதி செய்யப்படுகிறது. அதேபோல் இரு பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், 18 வயது வரை மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மாநிலம் முழுவதும் உள்ள 34,809 நியாய விலைக் கடைகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இதில் மாநிலம் முழுவதும் முதியோர்கள் 20.42 லட்சம் பேர், மாற்றுத்திறனாளிகள் 1.28 லட்சம் பேர் என மொத்தம் 21.70 லட்சம் பேர் பயனாளிகளாக உள்ளனர். அடுத்த 2 ஆண்டுகளில் 5 லட்சம் ஏழைக் குடும்பங்களை முழுமையாக வறுமையிலிருந்து மீட்பதே இதன் குறிக்கோளாக உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தை பொறுத்தவரை 74 ஆயிரத்து 905 முதியவர்கள், 7 ஆயிரத்து 95 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 82 ஆயிரம் பயனாளிகளுக்குரிய அத்தியாவசிய பொருட்கள் 835 முதன்மை நியாய விலைக்கடைகள் வாயிலாக 1,084 வாகனங்கள் மூலம் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் மாதந்தோறும் முதல் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக, முதியவர்கள் வரிசையில் காத்திருக்கும் சிரமம் நீங்கியதை பெரும் நிம்மதியாக கருதுகின்றனர். அரசின் இந்த மனிதாபிமான நடவடிக்கை, விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதோடு, சமூக நீதியையும் நிலைநாட்டியுள்ளது. மொத்தத்தில் இதுவெறும் ஒரு விநியோகம் மட்டுமல்ல, அது அரசின் அக்கறையை மக்களின் இல்லங்களுக்கு நேரடியாக கொண்டு செல்லும் ஒரு உன்னத பாலமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: