பெண்ணிடம் தாலிச்சரடு பறித்த வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை செய்யாறு நீதிமன்றம் தீர்ப்பு

செய்யாறு, மார்ச் 29: செய்யாறு அருகே பெண்ணிடம் தாலி சரடு பறித்த அசாம் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து செய்யாறு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா கழனிபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மனைவி இந்திரா. இவர் கடந்த 2022ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி அதே கிராமத்தில் நடந்த நூறுநாள் வேலைக்கு சென்றார். அப்போது பைக்கில் வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த அசேன்அலி(27) என்பவர், இந்திராவை தாக்கி, கழுத்தில் இருந்த 7 சவரன் தங்கதாலியை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டார். படுகாயமடைந்த இந்திரா, செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின்பேரில் செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அசேன் அலியை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. இதில் நேற்று முன்தினம் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், தாலி சரடு பறித்த அசேன்அலிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.100 அபராதம் கட்டவேண்டும் என குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பாலாஜி தீர்ப்பளித்தார். பின்னர் அசாம் வாலிபர் அசேன்அலியை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: