ஆவணங்களை முழுமையாக பதிவேற்ற மறு வாய்ப்பு உத்தேச விடைக்குறிப்புகள்: டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது

சென்னை: டிஎன்பிஎஸ்சி செயலாளர் பானோத் மருகேந்தர் லால் வெளியிட்டுள்ள அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி 21.5.2025ல் அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு தேர்வர்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள், ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. சரிபார்ப்புக்குப் பின்னர், சில சான்றிதழ்கள் குறைபாட்டுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இத்தகைய தேர்வர்கள் ஆவணங்களை முழுமையாக பதிவேற்ற, குறைகளை சரிசெய்ய இன்று முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை (இரவு 11.59 மணிக்குள்) வாய்ப்பு வழங்கப்படுகிறது.

மேற்படி தேர்வர்களின் பதிவெண்களைக் கொண்ட பட்டியலில் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான குறிப்பாணை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்தகவல், அத்தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல், ஆகியவற்றின் வாயிலாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், அத்தேர்வர்கள் அனைவரும் குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆவணங்களை தேர்வாணைய இணையதளத்தில் அவர்களுடைய ஒருமுறை பதிவுக் கணக்கின் வாயிலாக பதிவேற்றம் செய்துகொள்ளலாம். அவ்வாறு செய்ய தவறும் பட்சத்தில், அவர்களின் உரிமை கோரல் (க்ளைம்) விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்) – II ல் உள்ள பதவிகளுக்கான தேர்வு 7.3.2026 மற்றும் 8.3.2026 அன்று நடத்தப்பட்டது. அதன்படி, தமிழ் தகுதித் தேர்வு, பொதுப் பாடங்கள், திறனறிவும் மனத்திறனும், வேளாண்மை, வணிக நிர்வாகம், மின் மற்றும் மின்னணுப் பொறியியல், நிதி மற்றும் அடக்கவிலைக் கணக்கியல், சட்டம், இயந்திரப் பொறியியல், உற்பத்தி மற்றும் தயாரிப்புப் பொறியியல் ஆகிய பாடங்களுக்கான உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளன.

இந்த பாடங்களின் உத்தேச விடைகளின் மீது முறையீடு செய்ய விரும்பும் தேர்வர்கள், உத்தேச விடைகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 7 நாட்களுக்குள், அதாவது ஏப்ரல் 3ம் தேதி மாலை 5.45 மணிக்குள் தேர்வாணைய இணையதளத்தில் தேர்வுப் பலகையின் கீழ் “Answer key Challenge” என்ற சாளரத்தைப் பயன்படுத்தி மட்டுமே முறையீடு செய்யலாம். இதற்கான அறிவுறைகள், வழிமுறைகள் தேர்வாணைய இணையதளத்திலேயே வழங்கப்பட்டுள்ளன. அஞ்சல் வழியாகவும், மின்னஞ்சல் வழியாகவும் பெறப்படும் முறையீடுகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

Related Stories: