தொகுதி பட்டியலுடன் செல்வப்பெருந்தகை டெல்லி பயணம் 28 தொகுதிக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்கிறது: ஓரிரு நாளில் பட்டியல் வெளியாக வாய்ப்பு

சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகளை அடையாளம் காணும் வகையில் 40 தொகுதிகள் கொண்ட பட்டியலை காங்கிரஸ் குழு தயார் செய்தது. இந்த தொகுதிகளில் இருந்து 28 தொகுதிகளை தேர்வு செய்வது குறித்து திமுக குழுவிடம் அதை வழங்கியது. அதன்படி காங்கிரஸ் கொடுத்துள்ள விருப்ப தொகுதிகளின் பட்டியல் வைத்து திமுக ஆலோசனை நடத்தியது.

காங்கிரஸ் அளித்துள்ள தொகுதிகளில் சில தொகுதிகளை திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கேட்டு வருகிறது. மேலும் மற்ற கட்சிகள் கேட்டுள்ள சில தொகுதிகளை காங்கிரஸ் கேட்டு வருகிறது. குறிப்பாக சிட்டிங் காங்கிரஸ் தொகுதிகளான விருத்தாசலம், தென்காசி தொகுதிகளை பெற திமுக பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது. இதன்பின் நேற்று முன்தினம் இரவு முதலே அண்ணா அறிவாலயத்தில் திமுக, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

காங்கிரஸ் தரப்பில் கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை, ராஜேஷ் குமார் உள்ளிட்டோரும், திமுக தரப்பில் சீனியர்களும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி நேற்று முன்தினம் இரவு காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 23 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுவிட்டன. ஆனால் மீதமுள்ள 5 தொகுதிகளை அடையாளம் காண்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதையடுத்து, நேற்று காலை அண்ணா அறிவாலயத்தில் இரு கட்சிகளின் நிர்வாகிகளும் மீண்டும் ஆலோசனை நடத்தினர்.

ஆனாலும் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி பட்டியல் இறுதியாகவில்லை. இதை தொடர்ந்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், தற்போது வரை இறுதி செய்யப்பட்ட தொகுதி பட்டியலுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், நிவேதித் ஆல்வா, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார், முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் சென்றனர்.

அதன்படி, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் 28 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு குழு கூட்டம் டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் தொகுதி பட்டியலை இறுதி செய்து, ஒரு தொகுதிக்கு 3 பெயர்கள் கொண்ட பட்டியல் தயார் செய்வதற்கான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, 3 பெயர்களில் ஒருவரை ராகுல்காந்தி உள்ளிட்ட மேலிட தலைவர்கள் தேர்வு செய்து வேட்பாளர்களை அறிவிக்க திட்டமிட்டுள்ளனர். இன்று தொகுதி பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஓரிரு நாளில் 28 தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர்களும் அறிவிக்கப்படுவார்கள் என தெரிகிறது.

Related Stories: