பூவை மூர்த்தி எம்எல்ஏ சம்பந்தப்பட்ட சிறுவன் கடத்தல் விவகாரம் வழக்கை ரத்து செய்யக்கோரிய பெண்ணின் தந்தை மனு தள்ளுபடி: காவல்துறை எதிர்ப்பால் உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: புரட்சி பாரதம் எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராமன் உள்ளிட்டோர் சிறுவன் கடத்தல் வழக்கில் பெண்ணின் தந்தை மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு வாபஸ் பெறப்பட்டதால் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர், இன்ஸ்டாகிராம் மூலம் தேனியைச் சேர்ந்த விஜயஸ்ஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். திருமணத்துக்கு விஜயஸ்ரீ பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, பெண்ணை தேடி தனுஷ் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

அவர் இல்லாததால், தனுஷின் சகோதரரை கடத்திச் சென்று இரவு பேருந்து நிறுத்தம் ஒன்றில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக தனுஷின் தாயார் அளித்த புகாரின்படி, புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் எம்எல்ஏவுமான ஜெகன்மூர்த்தி, கூடுதல் டி.ஜி.பி ஜெயராமன் உள்ளிட்டோருக்கு எதிராக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், தங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி பெண்ணின் தந்தை வனராஜ் உள்ளிட்ட மூவர் உயர் நீதிமன்றத்தில் மனுசெய்தனர். அதில், தங்களுக்குள் சமரசம் ஏற்பட்டு விட்டதாக தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன், இந்த வழக்கு தீவிரமான வழக்காகும். வழக்கை ரத்து செய்தால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். இந்த வழக்கு மக்கள் பாதுகாப்பு தொடர்புடையது.

ரத்து செய்தால் நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள். இந்த வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரி சம்பந்தப்பட்டுள்ளனர். எனவே சமரசத்தை அனுமதிக்க முடியாது. வழக்கை ரத்து செய்யக் கூடாது. வழக்கை விசாரித்து முடிக்க அவகாசம் வேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து மனுதாரர் தரப்பில் மனுவை திரும்ப பெற அனுமதி கேட்டதால் வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: