சென்னை: பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம் தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுத்துள்ள நிலையில், அதிகளவில் கூட்டம் கூடும் எனக் கேட்டு விண்ணப்பித்ததால் தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. தமிழகத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அரசியல் கட்சிகள் அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலகத்தில் முறையாக அனுமதி பெற்று பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விஜய் தொடங்கியுள்ள தவெகவின் முதல் தேர்தல் பிரசாரம் இன்று பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முல்லை நகரில் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக தவெகவினர் ஆன்லைன் மூலம் பெரம்பூர் தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாவிடம் அனுமதி கோரியிருந்தனர். அவர் சம்பந்தப்பட்ட எம்கேபி நகர் காவல் நிலையத்திற்கு அந்த கடிதத்தை அனுப்பி அனுமதி கேட்கப்பட்ட இடம் பாதுகாப்பான இடமா? என்பதை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தினார்.
அதன்படி, வியாசர்பாடி முல்லை நகர் பகுதியில் புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமார், உதவி கமிஷனர் சரவணன், எம்கேபி நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். தவெக சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் சுமார் 3 ஆயிரம் பேர் கூடுவார்கள் என கூறப்பட்டிருந்தது. ஆனால் குறிப்பிட்ட முல்லை நகர் பகுதியில் 300 பேர் முதல் 400 பேர் வரை மட்டுமே அங்கு ஆட்களை நிறுத்தி தேர்தல் பிரசாரம் செய்ய முடியும் என்ற சூழ்நிலை இருந்தது. போலீசார் சார்பில் அந்த இடத்தில் 3 ஆயிரம் பேரை நிற்க வைத்து பிரசாரம் செய்வது பாதுகாப்பானது இல்லை, எனவே போலீசார் சார்பில் இதற்கு அனுமதி வழங்க முடியாது என தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, ஆன்லைன் மூலம் அனுமதி கேட்ட தவெகவினருக்கு ஆன்லைன் மூலமே அனுமதி மறுக்கப்பட்ட விஷயம் தெரிவிக்கப்பட்டது. இதேபோல், கொளத்தூர் செந்தில் நகர் பகுதி மற்றும் வில்லிவாக்கம் பகுதிகளும் 3000 பேர் கூடுவார்கள் என அனுமதி கேட்கப்பட்டதாகவும், மேலும் ரோடு ஷோவுக்கு அனுமதி கேட்கப்பட்டதாகவும் அதனால் கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கம் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி தர மறுத்து விட்டனர். தவெக தலைவர் விஜய் பிரசாரம் இன்று தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் சென்னையில் இன்று விஜய் தேர்தல் பிரசாரம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
புதிதாக பிரசாரத்திற்கு தவெகவினர் மீண்டும் அனுமதி கோரி விண்ணப்பித்தால் 48 மணி நேரம் கழித்து தான் அனுமதி தர முடியும் என்ற விதிகள் உள்ளது. எனவே, அடுத்த இரண்டு நாட்களுக்கு விஜய் சென்னையில் பிரசாரம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சாதாரணமாகவே அரசியல் கட்சிகள் சார்பில் பொதுக்கூட்டம் அல்லது தேர்தல் பிரசாரத்திற்கு விண்ணப்பிக்கும் போது 300 அல்லது 250 பேர் தான் கூடுவார்கள் என கேட்டு விண்ணப்பிப்பார்கள். ஆனால் தவெக சார்பில் 3000 பேர் எனக்கேட்டு விண்ணப்பித்துள்ளனர். சென்னையில் எந்த இடத்திலும் 3 ஆயிரம் பேர் கூடுவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என கூறப்படுகிறது.
வழக்கமாக அரசியல் கட்சிகளுக்கு இந்த விஷயம் தெரியும். அதனால் எழுத்துப்பூர்வமாக படிவங்களை பூர்த்தி செய்யும் போது அதில் எவ்வளவு ஆட்கள் கூடுவார்கள் என்பதை குறைத்து காட்டுவார்கள். ஆனால் ஒரிஜினலாக எவ்வளவு பேர் வருவார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். ஆனால் இது எதுவுமே தெரியாமல் 3 ஆயிரம் பேருக்கு அனுமதி வேண்டும், ரோடு ஷோ நடத்த அனுமதி வேண்டும் என கேட்டு விண்ணப்பித்து விட்டு தற்போது விண்ணப்பித்த இடங்களில் எல்லாம் அனுமதி மறுக்கப்பட்டதால் தவெகவினர் செய்வதறியாமல் திகைப்பில் உள்ளனர்.
முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல தவெக தலைவர் விஜய் முதல் முதலில் பெரம்பூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்க இருந்த நிலையில் தற்போது அதற்கு முட்டுக்கட்டை விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறைந்தபட்சம் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்கு சென்று எப்படி படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டும், என்று கேட்டிருந்தால் அலுவலத்தில் வேலை செய்பவர்களே கூறியிருப்பார்கள். அதைவிடுத்து, ஸ்டைலாக ஆன்லைனில் அப்ளை செய்து ஆப்பு வாங்கிக்கொண்டு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவெகவினர் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
* தவெகவினரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
நடிகர் வடிவேலு ஒரு படத்தில் ஒரு வங்கியில் திருட செல்வார். அப்பொழுது ஒரு பேப்பரில் பிழைகளுடன் எழுதி தருவார். அந்த வங்கி ஊழியர் இந்த பேப்பரில் எல்லாம் தப்பு தப்பாக இருக்கிறது. இதையெல்லாம் திருத்தி கொண்டு வாருங்கள் பணம் தருகிறேன். சனி, ஞாயிறு இரண்டு நாள் பேங்க் லீவு… சீக்கிரம் வாங்க… என்று கூறுவார். ஒவ்வொரு முறையும் வடிவேலு தவறாக எழுதி கொண்டு வருவார். அதை வங்கி மேனேஜர் திருத்தி எடுத்து வாங்க… என்று கூறி அனுப்புவார். அதுபோல், தவெகவினர் அனுமதி கேட்டு விண்ணப்பித்த படிவங்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நிராகரிக்கப்பட்டு வந்ததை வடிவேலு காமெடியோடு ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் தவெகவினரை நெட்டிசன்கள் வறுத்தெடுக்கின்றனர்.
