சென்னை: திமுக கூட்டணியில் கடைசி நேரத்திலாவது பிரச்னை ஏற்படாதா, வெடிக்காதா என்று காத்திருப்பவர்கள் மீண்டும், மீண்டும் ஏமாற போகிறார்கள் என்று திருமாவளவன் கூறினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று அளித்த பேட்டி: திமுக குழுவுடனான பேச்சுவார்த்தையில் விசிகவிற்கான 8 தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளோம். ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. முறைப்படி அதிகாரப்பூர்வமாக கூட்டணியின் தலைவர் திமுக தலைவர் முக.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார்.
திருப்திக்கரமான, சுமுகமான அளவில் பேச்சுவார்த்தை நடந்தது. விரும்பிய தொகுதிகள் கிடைத்துள்ளன. ஓரிரு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. திமுக கூட்டணியில் கடைசி நேரத்திலாவது பிரச்னை ஏற்படாதா, வெடிக்காதா என்று காத்திருப்பவர்கள் மீண்டும், மீண்டும் ஏமாற போகிறார்கள். அப்படி எந்த பிரச்னையும் இல்லை. அவர்கள் சொல்வது போல இழுபறி இல்லை. 10க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் கூட்டணியில் இருக்கும் போது, தனித்தனியே ஒவ்வொரு கட்சியை அழைத்து பேசும் போது, ஒரு கட்சி கேட்கும் தொகுதிகளை, இன்னொரு கட்சி கேட்கும் நிலை இருக்கும்.
இந்த தாமதம் ஏற்பட தான் செய்யும். ஆகவே அவர்கள் இதை இழுபறி என்கிறார்கள். எந்த இழுபறியும் இல்லை என்பது தான் எதார்த்தமான உண்மை. நாளை (இன்று) காலைக்குள் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும். அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார். நாங்கள் தோற்க வேண்டும். வெற்றி வாய்பை இழக்க வேண்டும், தொகுதி பங்கீடு நடந்தாலும் கூட பாண்டிச்சேரியில் அப்படி தான் இருக்கும். சுயேச்சை என்ற பெயரில் வேட்புமனு தாக்கல் செய்வது, அந்த பிரச்னையுடனே தேர்தலை சந்திப்பது நீண்ட காலமாக களத்தில் சந்திக்கின்ற ஒன்று தான்.
ஒப்பந்தப்படி 16 தொகுதிகளில் காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. திமுக 13 இடங்களில் போட்டியிடுகிறது. எங்களுக்கு ஒரு தொகுதி உள்பட நாங்கள் 3 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்தோம். அதன்படி எங்கள் கட்சியின் சார்பிலே 3 தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள். எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பானை சின்னத்தை பாண்டிச்சேரியிலும் ஒதுக்க வேண்டும் என்று 24ம் தேதி கடிதம் எழுதினோம்.
ஆனால், அவர்கள் இதுவரை எங்களுக்கு பானை சின்னத்தை ஒதுக்கவில்லை. எனவே, சுயேச்சை சின்னத்தில் கேட்டு பெற்று இருக்கிறார்கள். சுயேச்சை சின்னத்திலே எங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். தேர்தல் முடிந்த பிறகு தான் வெற்றியா, பின்னடைவா என்பது. புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுமா என்று 24 மணி நேரத்தில் தெரிந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.
