திருவனந்தபுரம்: கேரளாவில் அரசியல் கட்சிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில் பாஜ கேரள பிரிவின் சீல் இருந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்று மத்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் அகில இந்திய பொதுச்செயலாளர் எம். ஏ. பேபி கோரிக்கை விடுத்துள்ளார். கேரளாவில் சட்டப்பேரவை தேர்தல் குறித்து மாநில தேர்தல் ஆணையம் சார்பில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இமெயில் மூலம் ஒரு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
அந்தக் கடிதத்தில் பாஜ கேரள பிரிவின் சீல் வைக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன. இதையடுத்து கேரள மாநில தலைமை தேர்தல் அதிகாரி ரத்தன் யு.கேல்கர் இது தொடர்பாக ஒரு விளக்கம் வெளியிட்டார். அதில் அவர் கூறியிருந்தது: அரசியல் கட்சிகளுக்கு அனுப்பப்பட்டிருந்த கடிதத்தில் பாஜவின் சீல் இருந்தது உண்மை தான். அது முற்றிலும் தொழில்நுட்ப ரீதியான ஒரு பிழை மட்டுமே ஆகும்.
வேட்பாளர்களின் குற்றப் பின்னணி தொடர்பான 2019ம் ஆண்டின் வழிகாட்டுதல்கள் தொடர்பாக விளக்கம் கோரி பாஜ கேரள மாநில பிரிவிடமிருந்து தேர்தல் ஆணையத்திற்கு ஒரு கடிதம் வந்திருந்தது. இதற்காக அவர்கள் விண்ணப்பத்துடன் அளித்திருந்த கடிதத்தில் அக்கட்சியின் சீல் வைக்கப்பட்டிருந்தது. பாஜவால் வழங்கப்பட்ட அந்தக் கடிதம் தவறுதலாக மற்ற கட்சிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
இருப்பினும் இந்த விஷயம் மார்ச் 21ம் தேதி தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வந்தது. உடனடியாக அந்த உத்தரவை திரும்ப பெற்றுக் கொண்டு அனைத்து கட்சிகளுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டது. இவ்வாறு அவர் அவர் கூறினார். ஆனால் தேர்தல் ஆணையத்தின் இந்த விளக்கம் ஏற்கத்தக்கதல்ல என்றும், இதற்கு பொறுப்பேற்று மத்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகவேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து எம்.ஏ.பேபி மேலும் கூறுகையில், தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில் பாஜவின் சீல் இருந்த விவகாரம் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை பாதிக்கின்றன. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் என்றார்.
