புதுடெல்லி: இந்தியாவில் கருணை கொலை செய்ய அனுமதிக்கப்பட்ட முதல் நபரான ஹரிஷ் ராணா டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார். உபி, காசியாபாத்தை சேர்ந்தவர் ஹரிஷ் ராணா பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பி.டெக் படித்து வந்தார். கடந்த 2013ம் ஆண்டு விடுதியின் 4வது மாடியில் இருந்து தவறி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்றார்.
அதிலிருந்து 13 ஆண்டுகள் உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்ட நிலையில், டியூப் மூலம் உணவும், நீரூம் அளிக்கப்பட்டு வந்துள்ளது. பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டும் நினைவு திரும்பவில்லை. இதையடுத்து அவரை கருணைக் கொலை செய்யக் கோரி பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். கோமா நிலையில் உள்ள ஹரிஷ்க்கு தொடர்ச்சியான சிகிச்சைகளை அளித்தபோதிலும், அவர் குணமடைந்து, சுயநினைவை எட்ட சாத்தியக்கூறுகள் குறைவு என மருத்துவர்கள் தங்கள் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
அதனைத் தொடர்ந்து ஹரிஷ் ராணாவை கருணை கொலை செய்ய கடந்த 11ம் தேதி நீதிபதிகள் அனுமதி அளித்தனர். அதை தொடர்ந்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ராணாவை கொண்டு வந்தனர். எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, ராணாவுக்கு அளிக்கப்பட்டு வந்த ஊட்டச்சத்து படிப்படியாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அவர் நேற்று காலமானார். அவரது பெற்றோர் கண்ணீருடன் விடை கொடுத்தனர்.
