புதுடெல்லி: மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடி குறித்து விவாதிப்பதற்காக இன்று அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஈரான் மீது கடந்த மாதம் 28ம் தேதி முதல் அமெரிக்காவும் , இஸ்ரேலும் இணைந்து கூட்டாக வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தி வருகின்றது.
போரின் காரணமாக அதில் பங்கேற்றுள்ள நாடுகள் மட்டுமின்றி கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் அனைத்து நாடுகளும் குறிப்பாக இந்தியாவும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகமும் பாதிக்கப்படும் அபாயம் நிலவி வருகின்றது. மத்திய கிழக்குப் போரினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி வெளிப்படையாக உரையாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில், மேற்கு ஆசிய போர் நிலவரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் உரையாற்றினார். ஆனால் இந்த உரையின்போது ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர்ந்து நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்களைக் கண்டிக்காததற்காக காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளது. இந்நிலையில் மத்திய கிழக்கு போர் குறித்து ஆலோசிப்பதற்காக இன்று அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இன்று மாலை 5 மணிக்கு நடக்கும் இந்த கூட்டத்திற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்குகின்றார். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கூட்டத்தில் போரினால் ஏற்பட்டுள்ள எரிசக்தி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு, வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்படும்.
* அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆப்சென்ட்
ராகுல்காந்தி இன்று நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தன்னால் கலந்து கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார். கேரளாவில் தான் கலந்து கொள்ள வேண்டிய ஒரு நிகழ்ச்சி இருப்பதால் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று ராகுல்தெரிவித்துள்ளார்.
