புதுடெல்லி: ரயில் பயணம் வசதியானதாகவும் மலிவானதாகவும் இருப்பதால் அனைத்து தரப்பு மக்களின் முதல் விருப்பமாக ரயில் போக்குவரத்து இருக்கிறது. ஊருக்கு செல்வது உறுதியாகிறதோ இல்லையோ முதலில் ரயிலில் டிக்கெட் எடுத்து வைத்து பிறகு கடைசி நேரத்தில் கேன்சல் செய்வதை பலர் வழக்கமாக வைத்துள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ரயில்வே டிக்கெட் ரத்து விதிமுறைகள் மாறப் போகிறது.
மாறப் போகும் ரயில்வே விதிமுறைகள் தொடர்பாக ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று தனது செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கினார். அவர் கூறியிருப்பதாவது: ரயில் பயணிகள் சேவைகளை மேம்படுத்த 5 முக்கிய சீர்த்திருத்தங்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இனி ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில், உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்தால் பணம் திரும்ப வழங்கப்படாது.
இந்த நடவடிக்கை கடைசி நேர ரத்துகளைக் குறைக்கவும், மற்ற பயணிகளுக்கு இருக்கைகள் கிடைப்பதை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ரயில் புறப்படுவதற்கு முன்பாக 24 மணி நேரம் முதல் 8 மணி நேரத்திற்குள் ரத்து செய்யப்படும் டிக்கெட்களுக்கு 50 சதவீத கட்டணம் கழிக்கப்படும். ரயில் புறப்படுவதற்கு முன்பாக 72 மணி நேரம் முதல் 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்யப்படும் டிக்கெட்களுக்கு 25 சதவீத கட்டணம் கழிக்கப்படும். 75 சதவீத தொகை திருப்பி தரப்படும்.
ரயில் புறப்படுவதற்கு முன்பாக 72 மணி நேரத்திற்கு மேல் ரத்து செய்யப்படும் டிக்கெட்களுக்கு ரத்து கட்டணம் மட்டும் கழிக்கப்பட்டு மீதமுள்ள அதிகபட்ச தொகை திருப்பி தரப்படும். கவுண்டரில் வாங்கும் டிக்கெட்களை ரத்து செய்வதற்கான இடக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட உள்ளன. இனி பயணிகள் எந்த நிலைய கவுண்டரிலும் ரத்து செய்யலாம்.
பயணம் செய்யாத டிக்கெட்களுக்கு ரீபண்ட் பெறும் டிடிஆர் வசதி இ-டிக்கெட்களுக்கு ரத்து செய்யப்படும். தானியங்கி முறையில் ரீபண்ட் தரப்படும். இந்த விதிமுறை மாற்றங்கள் வரும் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 15க்குள் படிப்படியாக அமல்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறி உள்ளார்.
* பயண வகுப்பை மேம்படுத்தலாம்
இனி கவுண்டர் டிக்கெட்டுகளுக்கு, ரயில் புறப்படும் நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு வரையிலும் பயண வகுப்பை மாற்ற அனுமதிக்கப்படும். இதற்கு முன்பு, பயணப் பட்டியல் தயாரிக்கப்படுவதற்கு முன்பு வரை மட்டுமே பயண வகுப்பை மாற்ற முடிந்தது. இது பயணிகளுக்கு மிகவும் வசதியான பயணத்தை வழங்கும் என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறி உள்ளார்.
* 30 நிமிடங்கள் வரை ஏறுமிடத்தை மாற்றலாம்
பயணிகள் இப்போது ரயில் புறப்படும் நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு வரை தாங்கள் ஏறும் நிலையத்தை மாற்றிக்கொள்ளலாம். இதற்கு முன்பு, பயணப் பட்டியல் தயாரிக்கப்படுவதற்கு முன்பு மட்டுமே ஏறும் இடத்தை மாற்ற அனுமதிக்கப்பட்டது. பல ரயில் நிலையங்களைக் கொண்ட பெரிய நகரங்களில் இந்த அம்சம் குறிப்பாகப் பயனுள்ளதாக இருக்கும். இது பயணிகள் தங்களுக்கு வசதியான நேரத்தில் அருகிலுள்ள எந்த நிலையத்திலிருந்தும் தங்கள் பயணத்தைத் தொடங்க அனுமதிக்கும் என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறி உள்ளார்.
