கவுகாத்தி: அசாம் முதல்வர் தொகுதி உள்பட மொத்தம் 3 தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அசாம் மாநிலத்தில் 126 தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்.9ஆம் தேதி நடக்கிறது. இதற்கான மனுத்தாக்கல் முடிந்து விட்டது. நேற்று மனுபரிசீலனை நடந்தது. இதில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா போட்டியிடும் ஜலுக்பாரி தொகுதி உட்பட, மூன்று காங்கிரஸ் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தாகுவாகானா தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் ஆனந்த நரா, ஹாப்லாங் தொகுதியைச் சேர்ந்த நிர்மல் லாங்தாசா மற்றும் ஜலுக்பாரி தொகுதியைச் சேர்ந்த பிதிஷா நியோக் ஆகியோரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தாகுவாகானா தொகுதி தற்போது பாஜவைச் சேர்ந்த அமைச்சர் நபா குமார் டோலேவின் வசம் உள்ளது. அதே சமயம் ஹாப்லாங் தொகுதியில், பாஜ அமைச்சரான நந்திதா கர்லோசா, காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
