மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் ஐதராபாத் எம்பி ஓவைசி தலைமையிலான இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சிக்கும், திரிணாமுல் காங்கிரசிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்எல்ஏ ஹுமாயூன் கபீர் தொடங்கிய ஆம் ஜனதா உன்னயன் கட்சிக்கும் கூட்டணி ஏற்பட்டுள்ளது. மேற்குவங்க தேர்தலில் மொத்தம் உள்ள 294 இடங்களில் இந்த கூட்டணி வேட்பாளர்களை நிறுத்த உள்ளனர். இதனால் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சிக்கு பாதகமாகவும், பா.ஜவுக்கு சாதகமாகவும் அமையக்கூடும் என்ற கருத்து எழுந்துள்ளது.
மேற்குவங்க மக்கள் தொகையில் சுமார் 30 சதவீத மக்கள் தொகை முஸ்லீம்கள். எனவே பாபர் மசூதி கட்டி வரும் ஹூமாயூன் கபீரின் கட்சிக்கு முஸ்லீம்கள் ஓட்டு பிரிந்து, அது பா.ஜவுக்கு சாதகமாக மாறக்கூடும் என்ற பேச்சு எழுந்துள்ளது. இதுபற்றி முதல்வர் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சவுகத் ராய், ‘இந்தக் கூட்டணி ஒரு மோசமான அணி. இது முஸ்லிம் மக்களைத் தனிமைப்படுத்தக்கூடும். அதே போல் ஒவைசியின் அமைப்பு உண்மையில் பாஜவுக்குத்தான் உதவுகிறது. ஆனால், சட்டப்பேரவை தேர்தலில் எந்தவிதமான தாக்கமும் ஏற்படாது. அவர்களுக்குப் போதிய பலம் இல்லை; அவர்களால் வாக்குகளையும் பெற முடியாது’ என்றார்.
மக்களவை காங்கிரஸ் கட்சி கொறடா மாணிக்கம் தாகூர் எம்பி கூறுகையில்,’மதச்சார்பற்ற சக்திகளைப் பலவீனப்படுத்துவதற்காகவே சிலர் ஒப்பந்தம் எடுத்துக்கொண்டு செயல்படுகின்றனர்’ என்றார். சிவசேனா (உத்தவ்) கட்சி எம்பி பிரியங்கா சதுர்வேதி,’ ஓவைசி கட்சியானது பல சமயங்களில் மறைமுகமாக பாஜவுக்கு உதவுகிறது. பாஜ எப்போதெல்லாம் நெருக்கடியைச் சந்திக்கிறதோ, அப்போதெல்லாம் அது ஓவைசியை அழைக்கிறது; பாஜவின் விரைவு அழைப்புப் பட்டியலில ஓவைசி கட்சி இடம்பெற்றுள்ளது’ என்றார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்பி மஹூவா மாஜி கூறுகையில்,’ ஓவைசி கட்சி பா.ஜவின் பி டீம்’ என்றார்.
நேற்று அங்கே… இன்று இங்கே… அசாம் பாஜ பெண் அமைச்சர் காங்கிரஸ் சார்பில் மனுத்தாக்கல்
அசாம் பாஜ பெண் அமைச்சர் நந்திதா கர்லோசா பாஜவிலிருந்து விலகி அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். உடனே வேட்புமனுத்தாக்கலும் செய்தார். அசாம் மாநிலத்தில் ஹாப்லாங் தொகுதியின் எம்.எல்.ஏ. நந்திதா கர்லோசா. இவர் முதல்வர் ஹிமந்தாபிஸ்வா சர்மா ஆட்சியில் சுரங்கம், தாதுக்கள் மற்றும் பழங்குடியின விசுவாசம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் அமைச்சராக உள்ளார். இவருக்கு, இந்த முறை அக்கட்சி மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. அவருக்குப் பதிலாக ரூபாலி லாங்தாசா என்பவரை பாஜ வேட்பாளராக அறிவித்தது. இந்த நடவடிக்கையால் அதிருப்தியடைந்த நந்திதா கர்லோசா, தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் அசாம் மாநில காங்கிரஸ் செயலாளர் நிர்மல் லாங்தாசா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் முன்னிலையில் நந்திதா கர்லோசா முறைப்படி காங்கிரசில் இணைந்தார். ஹாப்லாங் தொகுதியில் ஏற்கனவே நிர்மல் லாங்தாசாவை வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்திருந்தாலும், நந்திதா கர்லோசாவின் வருகைக்குப் பின் அங்கு வேட்பாளரை அதிரடியாக மாற்றியது. இதை தொடர்ந்து நேற்று அவசர, அவசரமாக நந்திதா கர்லோசா, காங்கிரஸ் வேட்பாளராக மனுத்தாக்கல் செய்தார். தனது விலகல் குறித்துப் பேசிய நந்திதா கர்லோசா, ‘மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த முடிவை எடுத்துள்ளேன், இனிமேல் காங்கிரஸில் இணைந்து மக்களுக்காகப் பணியாற்றுவேன்’ என்று கூறினார். அமைச்சராக இருந்த ஒருவரே ஆளும் கட்சியிலிருந்து விலகியது பாஜவுக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
* முதல்வர் ரங்கசாமியை எதிர்த்து மாஜி முதல்வர் நேரடி போட்டி
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி முதல்வர் ரங்கசாமியின் சொந்த தொகுதியாகும். இத்தொகுதியில் 1991. 1996, 2001, 2006, 2021 என 5 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 6வது முறையாக மீண்டும் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவரை எதிர்த்து மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி போட்டியிட முடிவு செய்துள்ளார். இதற்காக நேற்று மதியம் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மாநில தலைவர் வைத்திலிங்கம், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்திற்கு சென்று தேர்தல் நடத்தும் அதிகாரி அர்ஜூன் ராமகிருஷ்ணனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
முதல்வர் ரங்கசாமியை எதிர்த்து முன்னாள் முதல்வரும், மாநில காங்கிரஸ் தலைவருமான வைத்திலிங்கம் போட்டியிடுவது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் கடந்த 1996ம் ஆண்டு திமுக மாநில அமைப்பாளர் ஜானகிராமனை எதிர்த்து அதிமுக மாநில செயலாளரும், முன்னாள் முதல்வருமான எம்.டி.ஆர்.ராமச்சந்திரன் போட்டியிட்டார். அந்த தேர்தலில் ஜானகிராமன் வெற்றி பெற்று முதல்வரானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே தொகுதியில் இரு பெரும் தலைவர்கள் நேரடியாக மோத இருக்கின்றனர். காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் 1986, 1990, 1991, 1996, 2001 2006 ஆகிய தேர்தலில் நெட்டப்பாக்கம் தொகுதியிலும், 2011, 2016 ஆகிய தேர்தல்களில் காமராஜ் நகர் தொகுதியிலும் போட்டியிட்டு 8 முறை தொடர்ந்து எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். 2019, 2024 என இரண்டு முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்பி ஆனார்.
* நேற்று மார்க்சிஸ்ட் இன்று பாஜ வேட்பாளர்: இது கேரளா கூத்து
கேரளாவில் தேர்தல் நெருங்க நெருங்க சீட் கிடைக்காதவர்கள் கட்சி மாறும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. திருவனந்தபுரம் வர்க்கலா பிளாக் பஞ்சாயத்து சிபிஎம் உறுப்பினராக இருப்பவர் ஸ்மிதா சுந்தரேசன். இவர் ஒரு முறை இந்த பஞ்சாயத்தின் துணைத் தலைவராகவும், ஒரு முறை தலைவராகவும் பதவியில் இருந்துள்ளார். இவரது தந்தை சுந்தரேசன் வர்க்கலா பகுதியைச் சேர்ந்த மூத்த சிபிஎம் பிரமுகர். கடந்த 22ம் தேதி வர்க்கலா தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஜோய் உடன் இவர் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு சென்றார். அன்று இரவே யாரும் எதிர்பாராத வகையில் இவர் பாஜ மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகரை சந்தித்து அக்கட்சியில் சேர்ந்தார். மறுநாளே ஸ்மிதா வர்க்கலா தொகுதி பாஜ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
கடந்த பல தேர்தல்களில் இந்தத் தொகுதியில் பாஜ இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது. வர்க்கலாவில் சற்று செல்வாக்கு உள்ள ஸ்மிதா சுந்தரேசன் பாஜ வேட்பாளராக போட்டியிடுவது சிபிஎம்க்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் இவர் சிபிஎம் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2015ல் இவர் வர்க்கலா பிளாக் பஞ்சாயத்து துணைத் தலைவியாக இருந்தார். 2020ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றிபெற்ற இவருக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டது. கடந்த வருடம் நடந்த தேர்தலிலும் வெற்றி பெற்றதால் தனக்கு மீண்டும் தலைவர் பதவி கிடைக்கும் என்று ஸ்மிதா கருதினார்.
ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சட்டப்பேரவை தேர்தலிலாவது சீட் கிடைக்கும் என்று இவர் கருதி இருந்தார். ஆனால் அதுவும் நடக்கவில்லை. இதனால் கட்சி தன்னை ஒதுக்குவதாக கருதியதால் தான் ஸ்மிதா யாரும் எதிர்பாராதவகையில் பாஜவில் சேர்ந்ததாக கூறப்படுகிறது. கடந்த இரு சட்டப்பேரவைத் தேர்தலிலும் இந்தத் தொகுதி பாஜவின் கூட்டணிக் கட்சியான பிடிஜேஎஸ்க்குத் தான் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் இம்முறை பிடிஜிஎஸ் இடம் இருந்து இந்தத் தொகுதியை பறித்து பாஜ நேரடியாக களத்தில் குதித்துள்ளது.
