தாமரையில்தான் போட்டியிடணும்: அன்புமணி, டிடிவிக்கு பாஜ நெருக்கடி; நீதிமன்ற வழக்கை காட்டி மாம்பழம் முடக்கம்?

அதிமுக கூட்டணியில் பாஜ, பாமக, அமமுக மற்றும் சிறிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. பாஜ மற்றும் கூட்டணிக் கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்டதால் இழுபறி நீடித்து வந்தது. பின்னர் எடப்பாடி பழனிசாமி, டிடிவியை டெல்லிக்கு அழைத்து தொகுதி உடன்பாட்டை சீக்கிரம் முடிக்கும்படி அமித்ஷா கேட்டுக் கொண்டார். தொடர்ந்து சென்னையில் நேற்று பாஜ, பாமக, அமமுக ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகளை அதிமுக ஒதுக்கியது. அதில் பாமக, டிடிவி.தினகரன் ஆகியோர் தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று பாஜ மேலிடம் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

அதற்கு காரணம் பாமகவும், அதன் சின்னமான மாம்பழமும் தனக்குத்தான் வேண்டும் என்று ராமதாஸ் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு டெல்லி மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்களில் நடந்து வருகிறது. இதனால் மாம்பழம் சின்னம் முடக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால் அவ்வாறு சின்னம் முடக்கப்பட்டால், தேர்தல் ஆணையம் சின்னத்தை வழங்காவிட்டால், தாமரைச் சின்னத்தில் போட்டியிடும்படி பாஜ வலியுறுத்துவதாகவும், டிடிவி.தினகரனும் தாமைரைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று பாஜ வலியுறுத்தி வருவதாகவும், ஆனால் அவர்கள் இருவரும் மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதில் டிடிவி.தினகரன், கண்டிப்பாக குக்கர் சின்னத்தில்தான் போட்டி என்று உறுதியாக உள்ளாராம். ஆனால் அவர்கள் இருவரையும் பாஜ வலியுறுத்தி வருகிறது.

இதனால் அதிமுக அலுவலகத்தில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தின்போதும், பேட்டியின்போதும் அன்புமணி, டிடிவி.தினகரன் ஆகியோர் படு அப்செட்டாக இருந்தனர். முகம் மாறிப்போயிருந்தது. அவர்கள் இருவரும் தங்கள் சின்னத்தில்தான் போட்டி என்று பிடிவாதம் காட்டி வருகின்றனர். டிடிவி.தினகரனுக்கு தனி சின்னத்தில் போட்டியிட சம்மதித்தாலும், பாமகவுக்கு வழக்கு இருப்பதை காரணம் காட்டி சின்னம் கிடைக்காது என்று கூறப்படுகிறது. அவ்வாறு சின்னம் இல்லாவிட்டால் தனி சின்னத்தில் போட்டியிட வேண்டும். அதை மக்கள் மத்தியில் பதிய வைப்பது கடினம். புதிய சின்னத்தில் நின்றால், அடுத்த முறை கண்டிப்பாக மாம்பழம் கிடைக்காது. இதனால் என்ன செய்வது என்று அன்புமணி கடும் குழப்பத்தில் உள்ளாராம். இதனால் குழம்பிய குட்டையில் எப்படி மீன் பிடிப்பது என்று பாஜவும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்கின்றனர் பாஜ நிர்வாகிகள்.

* டெல்லிக்கு வரவழைத்து என்னை ஒன்றிய அரசு அவமானப்படுத்துச்சு… ரகசியங்களை சொல்லும் ஓபிஎஸ்
தேனி மாவட்டம், சின்னமனூரில் தேனி தெற்கு மாவட்ட திமுக சார்பில் அனைத்து நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் ஆலோசனை கூட்டம், நேற்று நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: ஜெயலலிதா காலமான காலத்திலிருந்து கடந்த பிப். 26ம் தேதி வரையும் என்னுடைய மகிழ்ச்சியை நான் தொலைத்திருந்தேன். பிப்ரவரி 27ம் தேதி திமுகவில் இணைத்துக் கொண்ட நாளில் இருந்து இன்று வரை நாங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாகப் பல்வேறு சோதனைகளுக்கு நான் உள்ளாக்கப்பட்டேன். அதை விரிவாகச் சொல்ல வேண்டும் என்றால் நாட்கள் பத்தாது, மாதங்கள் பத்தாது, வருடங்கள் பத்தாது. அவ்வளவு இம்சைகளை நான் சந்தித்தேன்.

ஒரு முறை ஒன்றிய அமைச்சரை பார்க்க வேண்டுமென்று நாங்கள் தேதி கேட்டோம். நேரம் கேட்டோம். சந்திக்க டெல்லி சென்றோம். உடனே அவர், ‘எந்த வாகனத்தில் வருகிறீர்கள்? வாகனத்தில் யார், யாரை அழைத்துக் கொண்டு வருகிறீர்கள்’ என கேட்டார். அனைத்து தகவல்களையும் சொல்லிவிட்டு அங்கு சென்றோம். எங்களை வரவேற்று வரவேற்பறையில் அமர வைத்தனர். சுமார் 15 நிமிடங்கள் கழித்து என்னிடம் ஒரு உதவியாளர் வந்து, ‘‘இன்றைக்கு அமைச்சர் உங்களை பார்க்க முடியாது என்று சொல்லிவிட்டார்’’ என்றார்.

தமிழ்நாட்டிலிருந்து டெல்லி போயிருக்கிறோம். வரவேற்று உட்கார வைத்து, 15 நிமிடங்கள் கழித்து பார்க்க முடியாது என சொல்லிட்டாங்க. அப்படியே நாங்க இறங்கி வந்துட்டோம். டெல்லியில் பத்திரிகையாளர்களிடமிருந்து தப்பித்து, சென்னை விமான நிலையம் வரும்போது பத்திரிகையாளர்கள் டெல்லி சந்திப்பு குறித்து கேள்வி கேட்டார்கள். அவர்களிடத்தில், ‘‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று அண்ணா சொல்லியிருக்கிறார். அது என்னிடத்தில் இருக்கிறது’’ என்று சொல்லி விட்டு போய் விட்டேன். அன்று நடந்தது எவ்வளவு பெரிய அவமானம். முன்னாள் முதல்வராக, ஒரு கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஒருவரை அவமானப்படுத்துற இயக்கம் தான் இன்றைக்கு மத்தியில் ஆளும்கட்சியாக டெல்லியிலே கோலோச்சிக் கொண்டிருக்கிறது. இவற்றையெல்லாம் கொஞ்சம் கூட நான் வெளிக்காட்டவில்லை. இவ்வாறு பேசினார்.

* ‘விடியல்’ பஸ்சில் வீட்டிற்கு போன அதிமுக எம்எல்ஏ
சேலம் மாவட்டம், கெங்கவல்லி தொகுதி அதிமுக எம்எல்ஏ நல்லதம்பி, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தம்மம்பட்டி சென்று ெகாண்டிருந்தார். வழியில் அவரது கார் திடீரென பிரேக் டவுன் ஆனது. அவரிடம் கட்சி நிர்வாகிகள் தங்களது காரில் கொண்டு சென்று விடுவதாக தெரிவித்தும், வேண்டாம் என கூறி விட்டு, அவ்வழியாக வந்த விடியல் பயண பஸ்சில் ஏறி, தம்மம்பட்டியில் இருந்து ஆத்தூருக்கு புறப்பட்டுச் சென்றார். இவர் மீண்டும் கெங்கவல்லியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்துள்ளார். அவருக்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, தொகுதி மக்களிடம் நற்பெயர் வாங்குவதற்காக, பொதுமக்களுடன் விடியல் பயண பஸ்சில் பயணித்ததாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். விடியல் பயண பஸ்சில் அதிமுக எம்எல்ஏ நல்லதம்பி பயணம் செய்யும் வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories: