ஆண்டுக்கு ரூ.1000 கோடி நலத்திட்டம் தொழிலாளர்களுக்கானது திமுக அரசு: அமைச்சர் சி.வி.கணேசன்

 

1இந்த ஆட்சியில், தொழிலாளர் நலனுக்காக பல திட்டங்கள் வந்திருந்தாலும் நீங்கள் முதன்மையாக கருதும் திட்டம் எது? இந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஒரு தொழிலாளருடைய நலன் காக்கும் அரசு என்பது இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் தெரிந்த ஒரு விஷயம். அதனால்தான் தொழில் முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு எல்லா நாடுகளிலிருந்தும் அவர்களே விரும்பி வரக்கூடிய ஒரு மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. ஆனால், அந்த தொழிலாளர்கள் படுத்து உறங்குவதற்கு அவர்களுக்கு என்று ஒரு வீடு இல்லை என்கிற ஒரு பெரிய ஏக்கம் இருந்தது. இதனை கருத்தில் கொண்ட முதலமைச்சர், அந்த தொழிலாளர்கள் தங்கி உறங்குவதற்கு, வசிப்பதற்கு ரூ.4 லட்சம் வழங்கி வீடு கட்டிக் கொள்வதற்கு வழங்கிய திட்டம்தான் சிறப்பான திட்டம். இதில் முதல் கட்டமாக 10,000 தொழிலாளர்களுக்கு வீடு கட்ட வழங்கப்பட்டுள்ளது.

2தொழிலாளர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு செய்யப்பட்டுள்ள விஷயங்கள் திமுகவுக்கு எந்த அளவுக்கான தாக்கத்தை வரும் தேர்தலில் ஏற்படுத்தும்? தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.1,200 பென்ஷன் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினர்கள் பதிவு செய்வது மிகவும் குறைந்து போயிருந்தது. இப்போது இந்த 4 வருடத்தில் 50 லட்சம் பேர் பதிவு செய்திருக்கிறார்கள். ஆண்டுக்கு 10 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெறக்கூடிய வகையில் 3 லட்சம் பேர் பென்ஷன் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆண்டுக்கு ரூ.1,000 கோடி அளவுக்கு நலத்திட்டங்களை இந்த அரசாங்கம் தொழிலாளர்களுக்கு செய்து கொண்டிருக்கிறது. மேலும், கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை வழங்கப்படுகிறது. ​பணியிடத்தில் விபத்தில் இறந்துபோகும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.5 லட்சமாக இருந்த நிதியை, முதலமைச்சர் ரூ.8 லட்சமாக உயர்த்தியுள்ளார்.

உதவித்தொகை இப்போது அதிகபட்சம் ஒரே வாரத்திற்குள் பணம் சென்றடைய வேண்டும் என்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார். ​​மகளிர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஊக்கத்தொகையாக 2,500 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கி ஆட்டோ வாங்கித் தரப்பட்டுள்ளது. ​தொழிலாளர்கள் ஓய்வெடுக்க 50 உழைப்பாளர் ஓய்வுக்கூடங்கள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுப் பணிகள் நடக்கின்றன. ​கிக் ஒர்க்கர்ஸ் இணையம் சார்ந்த தொழிலாளர்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ.20,000 மானியம் வழங்கப்படுகிறது. ​இப்படி தொழிலாளர்கள் எப்போது வந்து எதைக் கேட்டாலும் உடனடியாக நிறைவேற்றக்கூடிய அரசு என்ற பெருமையை முதலமைச்சர் பெற்றுத்தந்துள்ளார். இதனால் தேர்தலில் தொழிலாளர்களின் ஆதரவு திமுகவிற்குப் பெரும்பான்மையாக இருக்கும்.

3மற்ற சில துறை அமைச்சர்களது செயல்பாடுகள் விளம்பரப்படும் அளவிற்கு தொழிலாளர் நலத்துறையின் செயல்பாடுகள் வெளிச்சத்துக்கு வரவில்லை என்ற வருத்தம் ஏதேனும் உங்களுக்கு உள்ளதா?
அப்படிலாம் விளம்பரம் வராம இல்ல. விளம்பரப்படுத்துறத விட மக்களுக்கு திட்டங்கள் போய் சேரணும். அந்த பயன் போய் சேரணும். அதான்… தொழிலாளர்கள், மக்கள் சந்தோஷமா இருக்கணும். அதாவது செயல்பாடுகள் தான் முக்கியமே தவிர விளம்பரம் முக்கியம் இல்ல.

4உட்கட்சி கசப்புகள், களத்தில் எதிரணியின் தாக்குதல்கள்… இவற்றை இந்த தேர்தலில் எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்? எங்க கட்சியில உட்கட்சி பூசலே இல்லை. எந்த கசப்புகளும் இல்லை. எங்க முதலமைச்சர் ஒரு அமைதியான முதலமைச்சர். பேசுறதை விட செயல்ல செஞ்சு காட்டுவோம் அப்படின்னு சொன்னவர். செயல்ல செஞ்சு காட்டியிருக்கார். ​மகளிர் உரிமைத் தொகை திட்டம், ​புதுமைப் பெண் திட்டம், ​தமிழ்ப் புதல்வன் திட்டம், ​விடியல் பயணம் திட்டம். ​யாரும் சிந்திக்காத ஒரு திட்டம், ரேஷன் பொருட்களை வீட்டிற்கே கொண்டு சேர்க்கும் திட்டத்ைத கொண்டு வந்தது முதல்வர்.

இதைவிட ஒரு சிறப்பான திட்டமான பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 கொடுக்கிற திட்டம், அதனால எல்லா மக்களும் இப்படி ஒரு முதலமைச்சர் இந்தியாவுல, ஏன் உலகத்துல இல்லைன்னு சொல்லக்கூடிய அளவுக்கு காலை உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்திருக்காரு. இங்கிலாந்து பிரதமரே தமிழ்நாட்டு முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலின் கொண்டு வந்த திட்டத்தை நான் நடைமுறைப்படுத்துவேன்னு சொல்லி பாராட்டும் அளவுக்குத் திட்டங்களைக் கொண்டு வந்திருக்காரு. குடிநீர் பஞ்சம் இல்லாத ஒரு ஆட்சிதான் நம் முதலமைச்சரின் ஆட்சி. அதனால எங்களுக்கு உட்கட்சி பூசலும் இல்லை, கசப்புகளும் இல்லை. மக்கள் எப்போ வாக்களிக்கலாம்னு சந்தோஷமா இருக்காங்க. பொங்கலுக்கு ரூ.3,000 கொடுத்தாரு, யாரும் கேட்காமலே ஒரே இரவுல ரூ.5,000 கொடுத்திருக்காரு. இன்னைக்கு எல்லாரும் முதலமைச்சரை ஒரு அண்ணனா, அப்பாவா நினைக்கிறாங்க. இந்த ஆட்சி மகளிருக்கான ஆட்சி, சமூக நீதி ஆட்சி. ​அதனால, இந்த வெற்றி என்பது மீண்டும் 2026ல் மிக எளிதாக, எல்லா மக்களின் ஆதரவோட வரும். முதலமைச்சர் சொன்னது போல, ‘வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்காதவர்களுக்கும் தான் என் ஆட்சி’ என்பதால், வாக்களிக்காத மக்களும் இனி சேர்ந்து வாக்களிப்பார்கள்.

 

Related Stories: