சீனியர் மாஜிக்களை ஓரங்கட்டிய 3வது சக்தி; பூட்டுக்கு பூட்டு போட முடியாமல் தவிக்கும் எடப்பாடி

 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த சட்டமன்ற தேர்தல் ரொம்பவே முக்கியமானது. இதனால், அவரை சுற்றிலும் நெருக்கடி வளையம் சூழ்ந்துள்ளது. கட்சிக்கு வெளியிலும், கட்சிக்குள்ளும் கடும் சவால்களை சந்தித்து வருகிறார். கட்சியின் மூத்த நிர்வாகிகளும், மாவட்ட நிர்வாகிகள் பலரும் தேர்தலில் போட்டியிடும் மன நிலையில் இல்லை. அதிலும் குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் எடப்பாடிக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தை (பூட்டு மாவட்டம்) பொறுத்தவரை முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் மாவட்டச் செயலாளர்களாகவும், மூத்த நிர்வாகிகளாகவும் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் பரமசிவம், அதிமுக மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளராக உள்ளார். மாவட்ட மூத்த நிர்வாகிகளாக மாஜி அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசனும், நத்தம் விஸ்வநாதனும் இருந்தாலும் மூன்றாவது பெரிய சக்தியாக கட்சிக்குள் உருவெடுத்து வருகிறார் டாக்டர் பரமசிவம். இவரது வளர்ச்சியும், இவருக்கு எடப்பாடி தரப்பு ெகாடுக்கும் முக்கியத்துவமும், இதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளும் இந்த தேர்தலில் எதிரொலிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது என கட்சியினர் பேசத் தொடங்கியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த முறை மாவட்டச் செயலாளர்கள் பரிந்துரைக்கும் நபர்களுக்கு எம்எல்ஏ சீட் கொடுக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாராம். இதன் பின்னணியில் டாக்டர் பரமசிவம் உள்ளதாக மாஜி அமைச்சர்களின் ஆதரவாளர்கள் பேசிக் கொள்கின்றனர். மாவட்டச் செயலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்காமல் அணியின் மாநிலச் செயலாளரான டாக்டர் பரமசிவத்திற்கு முழு ஆதரவு அளித்து வரும் எடப்பாடி பழனிசாமி மீது இரு மாஜிக்களும் கடும் அதிருப்தி மன நிலையில் இருக்கிறார்களாம். அதிருப்தியை வெளியில் காட்டினால் எங்கு நமக்கு சீட்டுக் கொடுப்பதில் பிரச்னை வந்து விடுமோ என்று அச்சத்தில் உள்ள இருவரும், தேர்தல் வரட்டும். நாம் யாரென்று காட்டுவோம் என முடிவு எடுத்துள்ளார்களாம்.

இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளும் எடப்பாடிக்கு இம்முறை பெரும் சவாலாக அமையும் என அதிமுகவினர் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்கான அதிமுக வேட்பாளர் டாக்டர் பரமசிவம் என அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். இவருக்கு எதிராக முன்னாள் எம்எல்ஏ தென்னம்பட்டி பழனிச்சாமி தரப்பும், வேடசந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் என சமூக வலைதளத்தில் விளம்பரம் செய்து செம டஃப் கொடுத்து வருகிறார்களாம். டாக்டர் பரமசிவத்தின் நடவடிக்கையும், அவருக்கு ஆதரவான எடப்பாடியின் நடவடிக்கையும் திண்டுக்கல் மாவட்ட அதிமுகவில் கோஷ்டிமோதலை அதிகரித்துள்ளதாம். வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள உட்கட்சி பூசலில் மாவட்டச் செயலாளர்கள் தலையிட முடியாது என இரு மாஜிக்களும் கைவிரித்துவிட்டனராம். இதனால், இந்த தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் சவாலாகவே அமையும் என்கின்றனர் அதிமுகவினர்.

 

Related Stories: