நாராயணசாமிக்கே சீட் இல்லையா? காங். மாநில தலைவரை முற்றுகை: போலீசுடன் தள்ளுமுள்ளு

புதுச்சேரி: புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி போட்டியிட விரும்புவதாகவும், அதை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டுமென கட்சித் தலைமையிடம் கூறியதாக தெரிகிறது. இதை ஏற்காததால் நேற்று முன்தினம் இரவு ஆலோசனை கூட்டத்தில் இருந்து பாதியிலேயே நாராயணசாமி வெளியேறினார். அவருக்கு கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட ஏ- பார்ம், பி- பார்ம் வழங்கப்படவில்லை. இதனால் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

நாராயணசாமிக்கு நெல்லித்தோப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தகவலறிந்த, அவரது ஆதரவாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் உடனே கந்தப்பமுதலியார் வீதியில் உள்ள வைத்திலிங்கம் வீட்டை நேற்று மதியம் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முன்னாள் முதல்வருக்கே வாய்ப்பு மறுப்பதா? என கோஷமிட்டு, வைத்திலிங்கம் உடனே கட்சி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டுமென ஆவேசத்துடன் கூறினர். அப்போது வேட்பு மனுவை தாக்கல் செய்ய தனது வீட்டிலிருந்து வைத்திலிங்கம் காரில் புறப்பட்டார். அங்கிருந்த நாராயணசாமி ஆதரவாளர்கள் அவரது காரை நகர விடாமல் தடுத்தும், காரின் முன்பு படுத்தும், நடுரோட்டில் அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அவரது வீடு அமைந்துள்ள கந்தப்ப முதலியார் வீதியின் இருபுற திசைகளில், இருசக்கர வாகனங்களை குறுக்கே நிறுத்தி கார் வெளியே செல்ல முடியாத அளவுக்கு தடுப்பு அமைத்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து ஒதியஞ்சாலை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டயாமாக இழுத்து சென்றனர். அப்போது போலீசாருக்கும், நாராயணசாமி ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன்பிறகு சாலையில் நிறுத்தப்பட்ட வாகனங்களை ஒழுங்குபடுத்தி, வைத்திலிங்கத்தின் காரை விடுவித்தனர். இதேபோல் காங்கிரசில் சீட் கிடைக்காத விரக்தியில் மங்கலம் தொகுதியைச் சேர்ந்த ரகுபதி உள்ளிட்ட மேலும் சிலரும் ஆதரவாளர்களுடன் முற்றுகையிட திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை சமாதானப்படுத்தும் நடவடிக்கையில் கட்சித் தலைமை இறங்கியுள்ளது.

Related Stories: