பறக்கும் படையை ஏமாற்ற புது ஐடியா நாங்க கும்பலாக சுத்துவோம்… அய்யோ அம்மான்னு கத்துவோம்…

 

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 23ம்தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு சரியாக ஒரு மாதமே உள்ள நிலையில் பல்வேறு பகுதியில் தேர்தல் பறக்கும் படை தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். முறையான கணக்கு இல்லாமல் தனிநபர் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் எடுத்து சென்றால் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். தற்போது, பங்குனி மாதம் என்பதால், திருமண மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதையொட்டி நகைகள், துணிமணிகள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பறக்கும் படையினர் அதிக கெடுபிடி காட்டி வருகின்றனர். குறிப்பாக நகைகள் வாங்க லட்சக்கணக்கில் பணம் கொண்டு செல்ல வேண்டி உள்ளது. அவ்வாறு எடுத்துச் சென்று சோதனையில் சிக்கி பணத்ைத பறிமுதல் செய்தால், சுப நிகழ்ச்சியை மகிழ்ச்சியாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டுவிடும். வீட்டு விசேஷத்தின்போது, நிறைய வேலைகள் இருக்கும். அதைவிட்டுவிட்டு பறிமுதல் செய்த பணத்தை பெற அரசு அலுவலகத்துக்கு நடக்க வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே, இதனை தவிர்க்க பண்ருட்டி மக்கள் புது ஐடியாவை கடைபிடிக்க தொடங்கி உள்ளனர். பறக்கும் படை சோதனையில் இருந்து தப்பிக்க குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களிடம் தலா ரூ.50 ஆயிரத்துக்கு கீழே பணத்தை பிரித்து எடுத்துக் கொடுத்து, கடைக்கு செல்கின்றனர். அங்கு நகை மற்றும் பொருட்களை வாங்கியபின், ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக உள்ள பணத்தை சேர்த்து அங்குள்ள காசாளரிடம் கட்டிவிட்டு பொருட்களை வாங்கி மகிழ்ச்சியுடன் வீடு திரும்பி வருகின்றனர். இதனால் உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு வீண் அலைக்கழிப்பு ஏற்பட்டாலும், தங்களின் பணம் பாதுகாக்கப்படுவதோடு சுபநிகழ்ச்சிகளை சுமுகமாக நடத்தி முடிக்கலாம் என திருமண வீட்டார் கூறுகின்றனர். தேர்தல் காலத்தில் இப்பிரச்னையை களைய இதைவிட வேறு வழியில்லை என கூறும் பண்ருட்டி தொகுதி மக்கள், திருமண வீட்டாாின் கஷ்டங்களை உணர்ந்து, அவர்களையாவது தங்களது திருமண செலவிற்கான கூடுதல் பணம் கொண்டு செல்வதற்கான உச்ச வரம்பை அதிகரிக்க வேண்டுமென தேர்தல் துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

Related Stories: