சென்னை: தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜ, பாமக, அமமுக, தமாக, ஐ.ஜே.கே. பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த வாரம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் தினகரன் ஆகியோர் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசி கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்று பேசி முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிமுக தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. அதற்காக ஒன்றிய அமைச்சர், பாஜ தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் சென்னைக்கு வந்தார். அவருடன் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் உள்பட கூட்டணி கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து முடிவில் தொகுதி பங்கீட்டுகள் இறுதி செய்யப்பட்டது. அதன்படி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 3 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பாஜவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுக 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்ற கூட்டணி கட்சிகளுக்கு இன்று தொகுதி பங்கீடு கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இன்று மாலை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தல் வியூகம் குறித்து விவாதிக்கவும், கூட்டணி கட்சிளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்கினால் வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று கலந்து பேசி முடிவு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
