புதுச்சேரி தொகுதி பங்கீடு கையெழுத்து காங்கிரஸ்-16, திமுக -14

புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரசுக்கு 16 தொகுதிகள், திமுகவுக்கு 14 தொகுதிகள் என தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தானது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற ஏப்ரல் மாதம் 9ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 16ம் தேதி துவங்கிய நிலையில், வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடக்கிறது. வேட்பு மனுக்களை வரும் 26ம் தேதி வரை திரும்பப் பெறலாம்.

இந்நிலையில் புதுச்சேரியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, தேமுதிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. திமுக, காங்கிரஸ் இடையே கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது, கூடுதல் தொகுதிகளை இருவரும் கேட்டது உள்ளிட்ட காரணங்களால் இழுபறி நீடித்தது. வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால், நேற்று முன்தினம் நள்ளிரவு வரை திமுக-காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ்-16, திமுக-12, விசிக-1, இந்திய கம்யூனிஸ்ட்-1 என முடிவு செய்யப்பட்டது.

நள்ளிரவு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறப்பட்ட நிலையில் காலை வரை ஒப்பந்த கையெழுத்தாகவில்லை. இந்நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால், உறுதியான வேட்பாளர்களுக்கு திமுக மற்றும் காங்கிரஸ் சார்பிலும் ஏ பார்ம், பி பார்ம் கொடுக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஒரு சில தொகுதிகளில் மட்டும் இரு கட்சிகள் சார்பிலும் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்து உள்ளனர். இந்த சூழலில், காங்கிரஸ் – திமுக தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை கூட்டம் மகாத்மா காந்தி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

இதில் புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர், காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் உள்ளிட்ட தேர்தல் குழுவினர் மற்றும் திமுக சார்பில் புதுச்சேரி மாநில திமுக தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி, புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் சிவா உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் காங்கிரசுக்கு 16, திமுக 14 என தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. கூட்டணி கட்சிகளுக்கு திமுக தொகுதிகளை ஒதுக்கும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து, இருகட்சி தலைவர்களும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். தொகுதி பங்கீடு உறுதியான நிலையில், ஒரே தொகுதிக்கு இரு கட்சிகள் சார்பிலும் வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில், பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ஒரு வேட்பாளர் மனுவை வாபஸ் பெறுப்படும் என்று கூறப்படுகிறது.

Related Stories: