அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இம்முறை பாஜவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் வேண்டும் என கேட்ட பாமக மற்றும் அமமுகவிற்கும் கூட இம்முறை அவர்கள் விருப்பத்திற்கேற்ப தொகுதிகள் கிட்டியுள்ளன. அதன்படி பாமக 18 தொகுதிகளிலும், அமமுக 11 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளன. பாஜவை பொறுத்தவரை இம்முறை தங்களுக்கு காங்கிரசை விட ஒரு தொகுதியாவது கூடுதலாக வேண்டும் என விடாப்பிடியாக கேட்டுக் கொண்டிருந்தனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் 28 ெதாகுதிகளை பெற்ற நிலையில், எங்களுக்கு 29 அல்லது 30 தொகுதிகள் வேண்டும் என கேட்டனர். ஆனால் அதற்கு சம்மதிக்காத அதிமுக, இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் பாஜவிற்கு 27 தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளது. இருப்பினும் கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், இதே அதிமுக கூட்டணியில் பாஜ 20 இடங்களில் மட்டுமே போட்டியிட்டது.
இம்முறை 7 இடங்களை கூடுதலாக பெற்றுள்ளனர். இதனால் தென்மாவட்ட பாஜவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். அதிலும் குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இம்முறை பாஜவிற்கு கூடுதலாக தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிகிறது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜ, நாகர்கோவில், நெல்லை, மொடக்குறிச்சி, கோவை தெற்கு ஆகிய 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இம்முறை கூடுதலாக தொகுதிகள் கிடைத்துள்ளதால், தென்மாவட்டங்களில் விளவங்கோடு, பத்மநாபபுரம், கிள்ளியூர், நாகர்கோவில், ராதாபுரம், வாசுதேவநல்லூர், தென்காசி அல்லது ஆலங்குளம், விருதுநகர், மதுரை வடக்கு உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளிலும் களமிறங்க திட்டமிட்டுள்ளது.
