நாகர்கோவிலில் நேற்று அதிகாலை கன்டெய்னர் லாரி ஒன்றை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, அதில் ஏராளமான மரப்பெட்டிகள் மற்றும் இரும்புப் பெட்டிகள் இருந்தன. அவற்றைத் திறந்து பார்த்ததில் ரூ.500 நோட்டுகள் மட்டுமின்றி, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.20 நாணயங்கள் ஆயிரக்கணக்கில் பைகளில் குவித்து வைக்கப்பட்டிருந்தன. மொத்தம் ரூ.8 கோடிக்கு நாணயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காகக் கொண்டு செல்லப்படுகிறதா என்ற கோணத்தில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கினர்.
இதில், அந்த வாகனம் இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி, திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ‘கரன்சி செஸ்ட்’க்கு சென்றது தெரியவந்தது. வங்கிகளுக்கு இடையேயான பணப் பரிமாற்றம் மற்றும் புதிய நாணயங்களைப் புழக்கத்திற்கு விடும் ஒரு வழக்கமான நடவடிக்கை இது என விளக்கமளிக்கப்பட்டது. உரிய வங்கி அதிகாரிகள் நேரில் ஆஜராகி, ரிசர்வ் வங்கியின் முறையான அனுமதி கடிதங்கள் மற்றும் பணப் பரிமாற்ற ஆவணங்களைச் சமர்ப்பித்தனர். இதனைத் தொடர்ந்து, தேர்தல் ஆணைய ஒப்புதலுடன் பணம் பாதுகாப்பாக அந்த வாகனத்திலேயே, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
