விழுப்புரம், மார்ச் 24: விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதனிடையே நேற்று வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், சீக்கிரம் வெடிக்கும் என்றும், அலுவலர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த வட்டார போக்குவரத்து அலுவலர் (பொ) சரவணன் விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.
உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அலுவலகத்திலிருந்த பணியாளர்கள், ஓட்டுநர் உரிமம் எடுக்க வந்த பொதுமக்கள் உள்ளிட்டவர்களை வெளியேற்றினர். பின்னர் வெடிகுண்டு கண்டறியும் சிறப்பு பிரிவு சிறப்பு எஸ்.ஐ. வெங்கடேசன் தலைமையிலான போலீசார் மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட வெடிகுண்டு கண்டறியும் கருவிகளுடன் வட்டார போக்குவரத்து அலுவலர் அறை, மோட்டார் வாகன ஆய்வாளர் அறை உள்ளிட்ட அலுவலகத்தில் ஒவ்ெவாரு பகுதிகளிலும் சோதனையிட்டனர். நீண்டநேர சோதனைக்குப்பிறகு அதுவெறும் புரளி என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கிருந்து சென்றனர். தொடர்ந்து மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
