திருத்தணி, மார்ச் 24: நெடுஞ்சாலைத்துறையில் சாலைப் பணியாளர்கள் பற்றாக்குறையால், சாலைகள் பராமரிப்பு பெரும் சவாலாக உள்ளதாக சாலை பணியாளர்கள் வேதனை தெரிவித்தனர். நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலைகள் பராமரிப்பு, புதிய சாலைகள் அமைப்பது, சாலைகள் மேம்படுத்தல் மற்றும் விரிவுபடுத்துவது உள்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. சாலைகள் பராமரிப்பு பணிகளில் சாலைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சாலைகளுக்கு இருபுறமும் செடி-கொடிகள் அகற்றுவது, சாலைகளில் சிதறி கிடக்கும் மணல், ஜல்லி கற்களை அகற்றி சுத்தப்படுத்தி போக்குவரத்துக்கு வசதி ஏற்படுத்துவது, சாலையில் ஏற்படும் மேடு, பள்ளம் சீரமைப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இவர்களால் சாலைகள் முறையாக பராமரிக்கப்பட்டு தூய்மையாக வைத்திருப்பதால் வாகன விபத்துகள் பெரும் அளவில் குறைந்து வாகன ஓட்டிகள் அச்சமின்றி பயணம் செய்து வருகின்றனர். திருத்தணி உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை பொறுத்தவரை 240 கிமீ சாலைகள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது 5 சாலைப் பணியாளர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். திருத்தணி நகரம் உள்பட பல்வேறு பகுதிகளில் சாலைகள் பராமரிப்புக்கு 5 பேர் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருவதால், பெரும்பாலான சாலைகளில் பல நாட்களாக மண் நிரம்பி, ஜல்லி, குப்பை தேங்கி நிற்பதால் வாகனங்களில் சென்று வருவோர் விபத்துகளில் சிக்குகின்றனர். குறிப்பாக, மண் சாலைகளில் நிரம்பி இருப்பதால் இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கி பலர் காயமடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து, சாலைப் பணியாளர் ஒருவர் கூறுகையில், திருத்தணி உட்கோட்டம் முழுவதும் ஐந்து சாலைப் பணியாளர்கள் மட்டும் பணியாற்றி வருவதால், சாலைகள் பராமரிப்பு பெரும் சவாலாக உள்ளது. கடந்த காலங்களில் 50க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்த நிலையில், அவர்கள் பணி ஓய்வு பெற்ற பின்னர் புதிதாக சாலை பணியாளர்கள் நியமிக்காததால், சாலைகள் விரைந்து தூய்மைப்படுத்தி பாதுகாப்பாக வைத்துக் கொள்வது சவாலாக உள்ளது. தினக்கூலி அடிப்படையில் ஆட்கள் நியமித்து பணி செய்யவும் அதிகாரிகள் முன் வருவதில்லை. இதனால், சாலைகளில் மண், ஜல்லி கற்களால் விபத்து ஏற்படுவதாக தெரிவித்தார்.
