நாகர்கோவில், மார்ச் 24: தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு சொந்த தொகுதியில் பணி ஒதுக்க வேண்டும் என கலெக்டரிடம் ஆசிரியர் இயக்கங்களின் பேரமைப்பு மனு அளித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர் இயக்கங்களின் பேரமைப்பு சார்பில், ஒருங்கிணைப்பாளர் ஜாண் உபால்ட், தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் தியாகராஜன், தமிழ்நாடு பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழக மாநில செயலாளர் பெனின் தேவகுமார், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டதலைவர் ஜேம்ஸ் சந்திரகுமார், வடசேரி பள்ளி தலைமை ஆசிரியர் மோகன சந்திரன் மற்றும் மணிகண்டன் உள்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தேர்தல் பணியில் நியமிக்கப்படும் ஆசிரியர்களை சொந்த ெதாகுதியில் நியமிக்க வேண்டும். குறிப்பாக பெண்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். தேர்தல் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் பணிக்கு முன் அனுபவம் உள்ள ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும். அரசு மருத்துவர் சான்று பெற்று சட்ட மன்ற தேர்தல் பணியில் விலக்கு அளிக்க கோரும் மனுக்களை ஏற்று அவர்களை தேர்தல் பணியில் இருந்து விடுபட அனுமதிக்க வேண்டும்.
தேர்தல் பணியில் தலைமை வாக்குச்சாவடி அலுவலர்களால் நியமிக்கப்படுபவர்கள், அப்பணியை விரும்பாமல் வேறு ஒரு பணிக்கு விரும்பினால் அவர்களை உள்ளாகவே மாற்ற அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
