ஊத்துக்கோட்டை, மார்ச் 24: ஊத்துக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் நேரம் என்பதால் பொதுமக்கள் வசதிக்காக புகார் மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் மளிகை கடை, துணிக்கடை, அடகு மற்றும் நகை கடை வியாபாரிகள், விவசாயிகள் என 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில், பேரூராட்சியில் உள்ள 15 வார்களில் வசிக்கும் மக்கள் தங்கள் வார்டுகளில் குழாயில் தண்ணீர் வரவில்லை. மின் விளக்கு எரியவில்லை, சாலை குண்டும் குழியுமாக உள்ளது. சாலை ஓரங்களில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது என பல்வேறு குறைகளை தங்களின் வார்டு கவுன்சிலர்கள் அல்லது தலைவர் துணைத்தலைவரிடம் கூறி வந்தனர். இந்நிலையில், தற்போது சட்ட மன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மற்றும் குறைகளை அதிகாரிகளிடம் நேரிடையாக தெரிவிக்க முடியாது என்பதால், பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கை மனுக்களை புகார் மனு பெட்டியில் போடுவதற்கு ஏதுவாக ஊத்துக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் புகார் மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
