பொன்னேரி, மார்ச் 24: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காடு-போலாச்சி அம்மன் குளம் இடையே நெடுஞ்சாலையில் ஆரணி ஆற்று உயர் மடட்ட பாலத்தில் ஓட்டை ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால், உயிர் பயத்தில் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். பொன்னேரி அடுத்த பழவேற்காடு-போலாச்சி அம்மன் குளம் இடையிலான நெடுஞ்சாலையில் ஆரணி ஆற்றில் உயர்மட்ட பாலம் நீண்ட நாட்களாக பழுதடைந்து காணப்படுகிறது. இதனால், பக்கவாட்டு சுவர் பகுதி இடிந்து ஆற்றில் விழுந்து வருகிறது. கடந்த 2025 வடகிழக்கு பருவமழையின் போது பாலம் வெள்ள நீரால் சூழப்பட்டு மேலும் பல்வேறு விரிசல்கள் ஏற்பட்டது. தற்போது, இந்த மேம்பாலத்தின் ஒரு பக்கத்தில் திடீரென பள்ளம் ஒன்று ஏற்பட்டு ஓட்டை ஏற்பட்டுள்ளது. இந்த ஓட்டையில் வாகனங்கள் சென்று திடீரென பாலத்தின் ஒரு பகுதி பெயர்ந்து விழக்கூடிய அபாயம் உள்ளது.
ஒரு பக்கம் பேருந்து சென்றால் மறுபக்கம் இருசக்கர வாகனமும் அல்லது சிறிய ரக வாகனமோ அப்பகுதியில் வரும்போது அந்த ஓட்டை பள்ளத்தில் வாகனம் ஓட்டப்பட நேர்ந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஏற்படக்கூடிய அபாயமும் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை நெடுஞ்சாலை துறைக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பெரும் அசம்பாவிதம் நடப்பதற்குள் இந்த ஓட்டையை சரி செய்தால் பெரும் விபத்தை தவிர்க்க முடியும். எனவே, அரசு துறை அதிகாரிகள் இதனை உடனே கண்காணித்து சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்நோக்கி உள்ளனர்.
