ஓசியில் புரோட்டா கேட்டு பெண்ணை தாக்கியவர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி, மார்ச் 21: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, பொம்மிடியில் தனியார் தியேட்டர் அருகில் பிரியதர்ஷினி(37) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில், பிரியதர்ஷினி பார்சல் கட்டிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த சச்சின் குமார்(27) என்பவர் புரோட்டா பார்சல் கேட்டுள்ளார். அதற்கு பிரியதர்ஷினி பணம் கொடுத்தால் புரோட்டா கட்டித் தருகிறேன் என்று கூறினார். அப்போது, சச்சின்குமார் பணமெல்லாம் கொடுக்க முடியாது, என்னிடமே பணம் கேட்கிறாயா என்று, தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து, அவரது தாடையில் ஓங்கி குத்தினார். இதில், வாயில் ரத்தம் வந்து பிரியதர்ஷினி மயங்கி விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில், பொம்மிடி போலீசார் வழக்கு பதிவு செய்து சச்சின்குமாரை கைது செய்தனர்.

Related Stories: