நாகர்கோவில், மார்ச் 12: பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தனியார் பள்ளி அதிபரிடம், தமிழ்நாட்டில் நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.10.5 கோடி மோசடி செய்ததாக நாகர்கோவிலை சேர்ந்த தந்தை, மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் காவல் நிலையத்தில் பதிவான வழக்கு, தற்போது நாகர்கோவிலுக்கு மாற்றப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் மோகா பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் ஜெபக்குமார் (50). இவர் மோகா நகரில், சேக்ரட் ஹார்ட் இன்டர்நேஷனல் பள்ளி நடத்தி வருகிறார். தமிழ்நாடு உள்பட இந்தியாவின் சில நகரங்களில் இந்த பள்ளி இயங்கி வருகிறது. குமரி மாவட்டத்தில் ஏற்கனவே மார்த்தாண்டத்தில், இந்த இன்டர்நேஷனல் பள்ளி இருக்கிறது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். மேலும் பல நகரங்களில் இந்த பள்ளி தொடங்குவதற்கான நடவடிக்கைகளை சார்லஸ் ஜெபக்குமார் மேற்கொண்டு வந்தார். இதற்கான நிலம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
அப்போது, அவரது குடும்ப நண்பர் டாக்டர் சதீஷ் என்பவர் மூலம், நாகர்கோவில் வட்டக்கரை பகுதியை சேர்ந்த ஜோசப் மரிய செபாஸ்டின் அறிமுகம் கிடைத்தது. அவரும், அவரது மகன் ஜெ.பிரகாஷ் ஆகியோர் சேர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் கீழக்கோட்டை கிராமத்தில், 4 ஏக்கர் நிலம் வாங்கி தருவதாக கூறினர். இதையடுத்து சார்லஸ் ஜெபக்குமார், நாகர்கோவில் வட்டக்கரை வந்து 2 பேரையும் சந்தித்து பேசினார். நிலத்தை வாங்குவதற்காக, மின்னணு நிதி பரிமாற்றம் மூலம் ரூ.10.5 கோடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலத்தை சார்லஸ் ஜெபக்குமார் பெயரில் பதிவு செய்யாமல், ஜோசப் மரிய செபாஸ்டின் பெயரில் கிரய ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது.
இது பற்றி அறிந்ததும், சார்லஸ் ஜெபக்குமார் அதிர்ச்சி அடைந்தார். தனது பணத்தை பயன்படுத்தி மோசடி செய்து ஏமாற்றியதாக ேஜாசப் மரிய செபாஸ்டின், அவரது மகன் ஜெ. பிரகாஷ் மீது மோகா, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அங்குள்ள போலீசார் ேமற்கண்ட தந்தை, மகன் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு (ஜீரோ எப்.ஐ.ஆர்.) வழக்கு பதிவு செய்தனர். பின்னர் பணம் கைமாறிய இடம், நாகர்கோவில் நேசமணிநகர் காவல் நிலையத்துக்கு உட்பட்டது என்பதால், அந்த எப்.ஐ.ஆர். பதிவை குமரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு சிசிடிஎன்எஸ் மூலம் அனுப்பி வைத்தனர். பஞ்சாப் மொழியில் இருந்த அந்த எப்.ஐ.ஆர். பின்னர், சென்னையில் மொழி மாற்றம் செய்யப்பட்டு, தற்போது இந்த சம்பவம் தொடர்பாக சார்லஸ் ஜெபக்குமார் புகாரின் பேரில் நேசமணிநகர் காவல் நிலையத்தில் ஜோசப் மரிய செபாஸ்டின், அவரது மகன் ஜெ.பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
