மதுரை கலைஞர் நூலகத்தில் திறந்தவெளி கலையரங்கம்: விரைவில் அமையும் என எதிர்பார்ப்பு

மதுரை, மார்ச் 12: தென் மாவட்டங்களில் உள்ள பாரம்பரிய கலைகளை, அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் வகையில், மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் திறந்தவெளி கலையரங்கம் கட்ட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலத்தை போல், மதுரை, புதுநத்தம் சாலையில் ரூ.215 கோடியில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது. 2 லட்சம் சதுர அடியில், ரூ.60 கோடி மதிப்பிலான புத்தகங்கள், ரூ.18 கோடிக்கு தளவாட பொருட்களுடன் செயல்படும் இந்நூலகம், தென் தமிழக மாணவர்களின், கல்வி வளர்ச்சிக்கு கலங்கரை விளக்கமாக உள்ளது.

இந்நூலகத்தில், போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களுக்கான நிகழ்வுகள், நிலவொளியில் முத்தமிழ் முற்றம், இளையோர் களம், பெண்களுக்கான யாதுமாகி, மூத்த குடிமக்களுக்கான வேர்கள் உள்பட வாரத்தில், ஏழு நாட்களும் புதிய திட்டங்கள் வல்லுநர்கள் உதவியுடன் வைத்து நடத்தப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி, நாள்தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என, பல்வேறு தரப்பினரும் நூலகத்தை பார்வையிட்டு செல்கின்றனர்.

இந்நூலகத்தில், தென் மாவட்டங்களில் உள்ள பாரம்பரிய கலைகளான மயிலாட்டம், ஒயிலாட்டம், பொயக்கால் குதிரை, தோல் பாவை கூத்து, கட்டைக்கால் ஆட்டம் உள்ளிட்டவற்றை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் விதமாகவும், சுற்றுலா பயணியரை கவரும் விதமாகவும், திறந்தவெளி கலையரங்கம் கட்ட வேண்டும் என்று முடிவு ெசய்யப்பட்டது. இருப்பினும் அதற்கான நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் கவனித்து, திறந்தவெளி கலையரங்கம் கட்டுவது தொடர்பாக, திருத்திய திட்ட அறிக்கையை மீண்டும் அரசுக்கு அனுப்பவும், நிதி பெறவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: