வருசநாடு பகுதியில் நச்சுப்புகை கக்கும் தனியார் பேருந்துகள்

வருசநாடு, மார்ச் 12: தேனி, பெரியகுளம், குமுளி, மதுரை ஆண்டிபட்டி, கம்பம், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடமலை-மயிலை ஒன்றியம் வருசநாட்டிற்கு சுமார் 30க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் குறிப்பிட்ட மாத இடைவெளியில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வுக்கு உட்படுத்தி தகுதி சான்றிதழ் பெற வேண்டும். ஆனால் கடமலை-மயிலை ஒன்றியத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்கள் சில, போதிய அளவில் பராமரிக்கப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது. இதனைத் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கடமலை-மயிலை ஒன்றியத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்களில் சில, போதிய அளவு பராமரிக்கப்படாத காரணத்தால் சாலை முழுவதும் கரும் புகையை வெளியேற்றி கொண்டே செல்கிறது. இதனால் அந்த பஸ்களுக்கு பின்னால் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் பஸ்களில் இருந்து புகை அதிக அளவில் வெளியாவதால் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. இதேபோல அரசரடி வெள்ளிமலை, தும்மக்குண்டு, வாலிப்பாறை உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் அவ்வபோது பழுதாகி பாதியில் நின்று விடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: