புதிய தாழ்தள மின்சார குளிர்சாதன வசதியுடன் சென்னையில் பிரீமியம் பேருந்து சேவை

சென்னை, மார்ச் 12: புதிய தாழ்தள மின்சார குளிர்சாதன பிரீமியம் பேருந்து சேவையை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கிவைத்தார். சென்னை மக்களுக்கு பொதுப்போக்குவரத்து வசதியை மாநகர் போக்குவரத்து கழகம் சிறப்பான முறையில் வழங்கி வருகிறது. அந்தவகையில் சென்னை பல்லவன் இல்லத்தில் கூடுதல் வசதியுடன் கூடிய பொது போக்குவரத்து சேவையினை வழங்கிட புதிய தாழ்தள குளிர்சாதன மின்சார பேருந்துகளை கொண்டு பிரீமியம் பேருந்து சேவையை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்து வைத்தார்.இந்த பிரீமியம் பேருந்து சேவையை அதிக பயணிகளின் பயன்பாட்டில் உள்ள வழித்தடங்களில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக, P91 எண் கொண்ட இரண்டு பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்பட்டு திருவான்மியூர் வரை செல்லும். அதேபோல், P570S எண் கொண்ட மூன்று பேருந்துகள் எம்.ஜி.ஆர். கோயம்பேடு புறப்பட்டு சிறுசேரி தகவல் தொழில்நுட்ப பூங்கா வரை செல்லும். கூடுதல் வசதியுடன் நம்பகமான பயண அனுபவத்தை வழங்கும் இந்த பேருந்து சேவை தகவல் தொழில்நுட்ப மற்றும் தினந்தோறும் அலுவலகம் செல்லும் பயணிகளுக்கான சிறந்த தேர்வாக அமையும். தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக மையங்கள் உள்ளிட்ட அதிக தேவை உள்ள வழித்தடங்களில் பிரீமியம் பேருந்து சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், தனிநபர் வாகன பயன்பாடு மற்றும் தனியார் வாகனங்களுக்கு மாற்றாகவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் பயணத் தரத்தை மேம்படுத்தவும் “பிரீமியம் பேருந்து சேவை” உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், விமான நிலைய சேவைகள், மற்றும் இதர வாய்ப்புள்ள வழித்தடங்களில் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்குப் படிப்படியாக இந்த “பிரீமியம் பேருந்து சேவை” விரிவுபடுத்தப்படும். இந்த பிரீமியம் பேருந்து சேவையின் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 50 முதல் அதிகபட்சம் ரூ. 150 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் பிரபுசங்கர், மாநகர் போக்குவரத்து கழக இணை மேலாண் இயக்குனர் சுந்தரபாண்டியன் பொது மேலாளர்கள், உயர் அலுவலர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: