திருவொற்றியூர், மாதவரம் பகுதிகளில் எல்பிஜி காஸ் ஏஜென்சியில் குவிந்த பொதுமக்கள்

சென்னை, மார்ச் 12: மாதவரம் அருகே எல்பிஜி ஆட்டோ காஸ் சென்டரில் காலி சிலிண்டர்களுடன் பொதுமக்கள் குவிந்தனர். இதனால் ஆட்டோ ஓட்டுநர்கள், ஏஜென்சி ஊழியர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக வணிக சிலிண்டர் மற்றும் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஓட்டல்கள், உணவகங்கள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன. ஒருசில ஓட்டல்களில் உணவு பொருட்களின் வகைகள் குறைக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர்களும் தட்டுப்பாடு ஏற்பட்டதால் சமைப்பதற்கு சிலிண்டர் இல்லாமல் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். இதனால் தனியார் ஆட்டோ கேஸ் நிரப்பும் மையங்களுக்கு சிலிண்டருடன் செல்லும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வீட்டு உபயோகம் மற்றும் வணிக சிலிண்டர்களை நிரப்பி கொண்டு செல்கின்றனர்.

இந்நிலையில், நேற்று மாதவரம் ரவுண்டானா 100 அடி சாலை அருகே செயல்படும் தனியார் ஆட்டோ எல்பிஜி கேஸ் சென்டரில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி சிலிண்டருடன் குவிந்தனர். அதேபோல், ஆட்டோ ஓட்டுநர்களும் கேஸ் நிரப்ப ஆட்டோவுடன் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காஸ் நிரப்ப நீண்டநேரமானதால் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆத்திரமடைந்து காஸ் ஏஜென்சி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், பொதுமக்களிடம் அதிக பணம் வசூலித்துக் கொண்டு சமையல் சிலிண்டர்களில் காஸ் நிரப்பினால், நாங்கள் எப்படி தொழில் செய்வது, என்று முறையிட்டனர். இதையடுத்து, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஆட்டோ ஓட்டுநர்களை சமாதானம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: