வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.179.04 கோடியில் குடியிருப்பு, அச்சகம் திருமண மாளிகை, விளையாட்டு திடல்

சென்னை, மார்ச் 12: வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.179.04 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற குடியிருப்புகள், திருமண மாளிகை, மாநகராட்சி அச்சகம், விளையாட்டு திடல், ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை வால்டாக்ஸ் சாலை தண்ணீர்தொட்டி தெருவில், வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் ரூ.133 கோடி செலவில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் தரைதளம் மற்றும் 9 தளங்களுடன் 2,99,570 சதுர அடி கட்டிட பரப்பளவில் 2 தொகுதிகளாக (பிளாக் ஏ மற்றும் பி) 700 குடியிருப்புகள் கொண்ட முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகளின் கட்டுமான பணிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து, 10 பயனாளிகளுக்கு குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.

மேலும், 23,600 சதுர அடி கட்டிட பரப்பளவில் கீழ்தளம், தரைத்தளம் மற்றும் முதல் தளங்களுடன், 648 நபர்கள் அமரும் வகையில் ரூ.18.42 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள முதல்வர் திருமண மாளிகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து 10 இணையர்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசை பொருட்களை வழங்கி மணமக்களை வாழ்த்தினார். இதேபோல், 9,027 சதுர அடி கட்டிட பரப்பளவில் தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் ரூ.8.14 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சி அச்சகத்தை முதல்வர் திறந்து வைத்தார். 89,298 சதுர அடி பரப்பளவில் ரூ.9.81 கோடி செலவில் பேட்மின்டன்,

குத்துச்சண்டை, கூடைப்பந்து, வாலிபால் மற்றும் கால்பந்து மைதானங்கள், விளையாட்டு பகுதி, யோகா பகுதி, நிர்வாக கட்டிடம், கழிப்பறை வசதிகள், பசுமை பகுதி, அமர்விடங்களுடன் மையத் திறந்தவெளி பகுதி, நிலத்தடி தண்ணீர் சேமிப்பு தொட்டி, இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள முதல்வர் விளையாட்டு திடலையும் முதல்வர் திறந்து வைத்தார். இதையடுத்து, 16,770 சதுர அடி நிலப்பரப்பளவில் 16,045 சதுர அடி கட்டிடப பரப்பளவில் தரைத்தளம் மற்றும் நான்கு தளங்களுடன் ரூ.9.67 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பெருங்களத்தூரில் ரூ.4.73 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பூங்கா மற்றும் நல்ல தண்ணீர் குளத்தை முதல்வர் திறந்து வைத்தார்.

Related Stories: