வெம்பக்கோட்டை அருகே வீட்டில் வாணவெடிகள் தயாரித்த 2 பேர் கைது

ஏழாயிரம்பண்ணை, மார்ச் 12: வெம்பக்கோட்டை அருகே அரசு அனுமதியின்றி வீட்டில் வாண வெடிகள் தயாரித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். தாயில்பட்டி, வெம்பக்கோட்டை, ஆலங்குளம், விஜயகரிசல்குளம், சல்வார்பட்டி, ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பதாக காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளுக்கு ெதாடர்ந்து தகவல் கிடைத்து வந்துள்ளன. இந்த நிலையில் வெம்பக்கோட்டை பகுதியில் பட்டாசு தயாரிப்பதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் குருநாதன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெம்பக்கோட்டை காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த பவானீஸ்வரன்(39) என்பவருக்கு சொந்தமான வீட்டில் பட்டாசு தயாரிப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு சென்று சோதனை செய்தனர்.

அங்கு எந்தவிதமான அரசு அனுமதி இல்லாமல் சுமார் 10000 ரூபாய் மதிப்புள்ள வாண வெடிகள் தயாரித்து வந்தது தெரிய வந்தது. பின்னர் அங்கிருந்த வெடி மற்றும் மருந்து திரி உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வீட்டில் வைத்து பட்டாசு தயாரித்த உரிமையாளர் பவானீஸ்வரன் மற்றும் குருநாதன்(57) ஆகிய இருவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

Related Stories: