நாகர்கோவில், மார்ச் 12 : எரிவாயு மிச்சம் செய்வதற்காக குமரி மாவட்ட ஓட்டல்களில் உணவு வகைகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. புரோட்டா கடைகள், டீ கடைகள் கரி அடுப்புக்கு மாறின. ஈரானுக்கு எதிரான அமெரிக்கா, இஸ்ரேலின் கூட்டு தாக்குதல் நடவடிக்கைகளால், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்தியாவிலும் இதன் தாக்கம் தொடங்கி உள்ளது. கச்சா எண்ணெய் விலையேற்றம் ஒருபுறம் அதிகரித்து வரும் நிலையில், தற்போது வர்த்தக காஸ் சிலிண்டர்கள், வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா போன்ற இடங்களில் உணவகங்கள் மூடப்பட்டு வருகின்றன. குமரி மாவட்டத்திலும் வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 5 ஆயிரம் ஓட்டல்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. தட்டுப்பாடு பிரச்னையை சமாளிக்க நேர கட்டுப்பாட்டு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை ஓட்டல் நிர்வாகம் தொடங்கி உள்ளது. இன்றும், நாளையும் ஓரளவு நிலைமை சமாளிக்கப்படும். அதன் பின்னர், தாக்கம் பெரிதாக இருக்கும் என ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர் ஷாஜகான் கூறி உள்ளார். வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்களில் உணவு வகைகள் எண்ணிக்கை குறைந்துள்ளன. நாகர்கோவிலில் வெட்டூர்ணிமடம், வடசேரி பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் சிக்கன் ரைஸ், ப்ரைடு ரைஸ் போன்ற உணவு வகைகள் தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
மதிய சாப்பாடு வகைக்கு சாதம், சாம்பார், ரசம், மோர் மற்றும் 2 , 3 கூட்டு என்ற நிலை எட்டி உள்ளது. 2 வகை, 3 வகை குருமாக்கள் வைப்பதை குறைத்து, ஒரே ஒரு குருமா தான் வழங்குகிறார்கள். ஒரு சில அசைவ ஓட்டல்களிலும் வெகு நேரம் சிலிண்டர் பயன்பாட்டை குறைக்கும் வகையிலான நடவடிக்கையாக சிக்கன், மாட்டிறைச்சி, மட்டன் வகை உணவு பதார்த்தங்கள் குறைக்கப்பட்டுள்ளன. டீ கடைகளில் வடைகள் தயாரிப்பு குறைத்து உள்ளனர். ஒரு சில ஓட்டல்களில் கரி அடுப்பு , மின்சாரத்தில் இயங்கும் அடுப்புகளை பயன்படுத்த ஏற்பாடு செய்து வருகிறார்கள். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளிகளாக இருப்பவர்களுக்கு 3 வேளை உணவு தயாரித்து வழங்கப்படுகிறது. இன்னும் இரு நாட்கள் பயன்படுத்த சிலிண்டர்கள் உள்ளன. அதன் பின்னர் தான் கஷ்டம் ஆகும். ஏற்கனவே விறகு அடுப்பு உள்ளது. ஒரு வேளை சிலிண்டர் இல்லா விட்டால் அடுப்பை தான் பயன்படுத்துவோம் என அங்குள்ள பணியாளர்கள் கூறினர்.
சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சுமார் 350 தங்கும் விடுதிகள்,ரெசார்ட்டுகள், ஓட்டல்கள் உள்ளன. நேற்று வரை ஓட்டல்கள் வழக்கம் போல் இயங்கின. ஸ்டாக் இருக்கும் சிலிண்டர்களை ஏஜென்சிகள் வினியோகம் செய்தன. கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்றும் ஓட்டல்களுக்கு வர்த்தக சிலிண்டர்கள் வந்திறங்கின. கடற்கரை தெரு, சன்னதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் டீ கடைகள், ஓட்டல்கள் வழக்கம் போல் திறந்திருந்தன. நட்சத்திர விடுதிகள், ரிசார்ட்டுகளில் வழக்கம் போல் உணவுகள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன என்று அதன் உரிமையாளர்கள் கூறினர். புரோட்டா கடைகள், டீ கடைகளில் கரி அடுப்புக்கு மாறி உள்ளனர். இதனால் சிலிண்டரை மிச்சப்படுத்த முடியும் என கூறினர். கன்னியாகுமரி விவேகானந்தபுரம் சந்திப்பு, சின்னமுட்டம் பகுதிகளில் டீ கடைகள் நேற்று இரவில் சீக்கிரமாக அடைக்கப்பட்டன. மார்த்தாண்டம், களியக்காவிளை பகுதிகளில் நேற்று இரவு நேர கடைகள் வழக்கம் போல் இயங்கின. அதிகமாக தயாரிக்காமல், விற்பனைக்கேற்ப அவ்வப்போது பலகாரங்கள் தயாரிக்க முடிவு செய்திருப்பதாக கூறினர்.
குமரி மாவட்டத்தில் இந்த வாரம் ஞாயிறு வரை பெரிய அளவில் பிரச்னைக்கு வாய்ப்பு இல்லை என தெரிவித்த வியாபாரிகள், ஓட்டல்கள் மூடினால் வெளியூரில் இருந்து வந்து தங்கி இருப்பவர்கள், சுற்றுலா பயணிகள் தான் பெரும் பாதிப்படைவார்கள். நெடுஞ்சாலைகள், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் உள்ள ஓட்டல்கள் மூடினால் இரவு நேரங்களில் பெரும் பிரச்னை ஏற்படும் என்றனர்.
ஏஜென்சிகள் மறுப்பு; வீட்டு சிலிண்டர் புக்கிங் செய்பவர்கள் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், கேஸ் ஏஜென்சிகளில் நேரடியாக வந்து குவிந்து வருகிறார்கள். ஆனால் போன் புக்கிங், ஆன்லைன் புக்கிங் மட்டுமே நடைமுறையில் உள்ளது. நேரடி புக்கிங் செய்ய ஏஜென்சிகள் மறுத்து உள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் தவித்து வருகிறார்கள். ஏஜென்சி பணியாளர்கள் கூறுகையில் ஆன்லைன், போன் மிஸ்டு கால் மூலமே புக்கிங் செய்ய முடியும். நாங்கள் நேரடியாக புக்கிங் செய்ய முடியாது. இது வழக்கமான நடைமுறை தான். புக்கிங் வழக்கமாக தான் உள்ளது. கடந்த இரு நாட்களாக லோடுகளும் அனுப்பி உள்ளோம் என்றனர்.
