நாகர்கோவில், மார்ச் 12: அரசுப் பள்ளிகளில் சுமார் 37 ஆண்டுகளாகத் தூய்மைப் பணி செய்துவிட்டு, இன்றுவரை வெறும் 105 ரூபாய் மாதச் சம்பளத்தில் வறுமையின் பிடியில் தவிக்கும் 16 தூய்மைப் பணியாளர்கள், தங்களுக்கு நீதி கேட்டு நாகர்கோவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் கழிப்பறை, வகுப்பறை மற்றும் பள்ளி வளாகத்தைச் சுத்தம் செய்யும் பணிகளை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மேற்கொண்டு வந்த தூய்மை பணியாளர்களுக்கு கடந்த 2006-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை படி, 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களைப் பணிவரன்முறை செய்து ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டது.
ஆனால், குமரி மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் பணிபுரிந்த 16 தூய்மைப் பணியாளர்கள், 37 ஆண்டுகள் கடந்தும் தங்களுக்கு அந்த சலுகை வழங்கப்படவில்லை என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் முறையிட்டனர். நீதிமன்றம் பலமுறை இவர்களைப் பணிவரன்முறை செய்ய உத்தரவிட்டும், மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் அதைச் செயல்படுத்தவில்லை. இதனை கண்டித்து தூய்மை பணியாளர்கள் 16 பேர் நாகர்கோவிலில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.
