தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றன. குறிப்பாக திமுக குழு அமைத்து கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதில் காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்ட நிலையில், மற்ற கட்சிகளுடனான பங்கீடும் இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. ஆனால், அதிமுக கூட்டணியில் சில கட்சிகளே உள்ள நிலையிலும், இன்னும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை துவங்கப்படாமலே உள்ளது. இதற்கு பாஜ அதிக தொகுதிகளை கேட்பதே காரணம் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையத்திற்கு நேற்று வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் எந்த பதிலும் அளிக்காமல் நழுவிச் சென்றார்.
* அண்ணாமலையா…? அவர் கெடக்குறாரு…!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நேற்று முன்தினம் ஒன்றிய அரசின் மக்கள் மருந்தகம் திறப்பு விழா நடந்தது. இவ்விழாவில், தமிழக பா,ஜ. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு அழைப்பாளராக பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது. அதனால், இவரது வருகையை எதிர்நோக்கி பா.ஜ.வில் ஒருசில தொண்டர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் காத்து கிடந்தனர். ஆனால், நேரம் செல்லச்செல்ல தொண்டகள் கடுப்பாகினர். சுமார் 2 மணி நேரம் தாமதம் ஆகியும் அண்ணாமலை வரவில்லை. இதனால், கொதித்தெழுந்த அதிமுக தொண்டர்கள் அந்த இடத்தை காலிசெய்துவிட்டு நகர்ந்துவிட்டனர். அப்போது அவர்களிடம் சில பா.ஜ தொண்டர்கள், “அண்ணாமலை இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவார்… கொஞ்சம் காத்திருங்கள்…’’ எனக்கூறினர்.
அதற்கு அவர்கள், “அவர் கெடக்கிறாரு… ஒரு பதவியும் இல்லை.. அப்படி இருந்தும் 2 மணி நேரம் ஆகியும் இன்னும் வரவில்லை… இனிமேலும், எங்களால் காத்துகிடக்க முடியாது…’’ எனக்கூறிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டனர். கூட்டம் கலைந்து சென்ற பிறகு சுமார் இரண்டே கால் மணி நேரம் தாமதமாக அண்ணாமலை அங்கு வந்து சேர்ந்தார். என்னப்பா… யாரையும் காணோம்… என கேட்டார். அதற்கு பா.ஜ., தொண்டர்கள், அண்ணே… இவ்ளோ நேரம் கார்த்துக்கிடந்தாங்க… இப்பதான் புறப்பட்டு போறாங்க… எனக்கூறி சமாளித்தனர். அவரும், வேறு வழியில்லாமல் மருந்தகத்தை திறந்துவைத்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
* மோடி நாளை திருச்சி வருகை
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதையொட்டி அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. புதுச்சேரி மற்றும் திருப்பரங்குன்றத்தில் கடந்த வாரம் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, மீண்டும் நாளை (11ம் தேதி) தமிழகம் வருகிறார். திருச்சி பஞ்சப்பூரில் நடைபெறும் அரசு விழா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். பிரசார கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள். இதற்காக கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து தனிவிமானம் மூலம் மாலை 5.10 மணிக்கு பிரதமர் திருச்சி வருகிறார். பின்னர் அங்கிருந்து காரில் 5.30 மணிக்கு பஞ்சப்பூரில் விழா நடைபெறும் பகுதிக்கு செல்கிறார். பின்னர் இந்த நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு எ.புதூர் வழியாக காரில் திருச்சி விமான நிலையம் செல்லும் மோடி அங்கிருந்து விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
தலைவர்கள் இன்று… முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை எடப்பாடி பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்) சென்னை
செல்வப்பெருந்தகை (காங். மாநில தலைவர்) சென்னை
வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்) சென்னை
நயினார் நாகேந்திரன் (பாஜ தலைவர்) திருச்சி
பெ.சண்முகம் (சி.பி.எம்.மாநில செயலாளர்) சென்னை
மு.வீரபாண்டியன் (சி.பி.ஐ.மாநில செயலாளர்) சென்னை
திருமாவளவன் (வி.சி.க தலைவர்) டெல்லி
பிரேமலதா (தேமுதிக பொதுச்செயலாளர்) சென்னை
அன்புமணி (பாமக தலைவர்) சென்னை
ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்) டெல்லி
சீமான் (நாதக ஒருங்கிணைப்பாளர்) சென்னை
டி.டி.வி.தினகரன் (அமமுக பொதுச்செயலாளர்) சென்னை
விஜய் (தவெக தலைவர்) பனையூர்
