மானாமதுரை வாலிபர் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: உடற்கூராய்வு செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு

 

மதுரை: மானாமதுரை வாலிபர் மரண வழக்கை சிபிசிஐடி விசாரிக்குமென டிஜிபி கூறியுள்ளார். அவரது உடலை உடற்கூராய்வு செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஜெயக்குமார் (37), ஆதனூர் அழகர்சாமி (34) ஆகியோர் கடந்த 5ம் தேதி இரவு வெட்டப்பட்ட வழக்கில் மானாமதுரை போலீசார், கிருஷ்ணராஜபுரம் காலனியைச் சேர்ந்த ஆகாஷ் டெலிசன் (26), குணா (23) ஆகியோரை விரட்டிப்பிடித்தனர். போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது ஆகாஷ் டெலிசன் தவறி விழுந்ததில் அவரது காலில் முறிவு ஏற்பட்டது. மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது, மூச்சுத் திணறல் ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி ஆகாஷ் டெலிசன் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக ஆகாஷ் டெலிசனின் தந்தை ராஜேஷ்கண்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில், ‘‘எனது மகனின் மரணத்தை காவல் மரணம் என பதிவு செய்து, சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். எஸ்சி-எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணையை 6 மாதத்தில் முடிக்குமாறும் உத்தரவிட வேண்டும்’’ என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.விஜயகுமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ெஜனரல் அஜ்மல்கான் ஆஜராகி, ‘‘மானாமதுரை காவல் நிலைய சிசிடிவி காட்சிகளை பாதுகாப்பது, உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்வது போன்ற மனுதாரர் தரப்பு கோரிக்கைகளை அரசு ஏற்றுள்ளது’’ என்றார்.

இதையடுத்து நீதிபதி, ‘‘அரசுத்தரப்பில் கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன. எனவே, சாலை மறியலை கைவிட்டு, கலைந்து செல்ல மனுதாரர் அறிவுறுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் முன்னிலையில், மதுரை ராஜாஜி மருத்துவமனை முதல்வர் தலைமையில் விரைவாக உடற்கூராய்வு செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 11ம் தேதிக்கு (நாளை) தள்ளி வைத்தார்.

இதனிடையே ஆகாஷ் டெலிசன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 2வது நாளாக நேற்றும் மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து ஆகாஷின் பெற்றோர் மற்றும் உறவினர்களைஅமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர். இதற்கிடையில் இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: