சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் நேற்று அளித்த பேட்டி: எனக்கு காலில் எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை. சாதாரண சுளுக்குதான். எனவே 4, 5 நாட்கள் ஓய்வு எடுத்தால் போதும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில், தமிழ்நாட்டில் ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர், சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். தன்னலம் கருதாமல், கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து உழைக்கக்கூடியவர். ராஜ்யசபா வேட்பாளராக சாதாரண அறிமுகம் இல்லாத ஒருவரை கட்சித் தலைமை எவ்வாறு தேர்வு செய்ததோ? அதைப்போல் நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் தன்னலம் கருதாமல், கட்சிக்காக உழைக்கக்கூடிய, சாதாரண தொண்டர்களை தேர்வு செய்து, தேர்தலில் நிறுத்த இருக்கிறோம்.
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படம் சம்பந்தமாக பிரச்னை எழுந்தபோது ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைவருமே விஜய்யின் திரைப்படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தோம். தமிழ்நாட்டின் சினிமா உரிமையை தடுக்கக் கூடாது என்று சேர்ந்து குரல் கொடுத்தோம். பாஜ தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய்யை அழைக்க முயற்சிகள் நடக்கலாம்.
ஆனால் தமிழ்நாட்டில் திமுக-காங்கிரஸ் கூட்டணி பலம் வாய்ந்தது. வேறு எந்த சக்தியாலும் வெற்றி பெற முடியாது. காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட இருக்கும் 28 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். கட்சியின் மூத்த தலைவர்கள், வெற்றி வாய்ப்புகள் உள்ள தொகுதிகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர். இவ்வாறு கிரிஷ் சோடங்கர் கூறினார்.
