சென்னை: 3வது முறையாக டி20 உலககோப்பையை வென்று இந்திய அணி சாதனை படைத்ததற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்: கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த டி.20 உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை இந்தியா வென்றுள்ளது. இதோடு 3வது முறையாக டி-20 உலக கோப்பையை வென்று இந்தியா புதிய வரலாறு படைத்துள்ளது.
இதனை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகிறது. இறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 255 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் கோப்பையை வென்றுள்ளது இந்திய அணி. சிறப்பாக விளையாடிய இந்திய அணிக்கும் அதன் வீரர்கள் அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3வது முறையாக வெற்றி பெற்று இந்தியாவிற்கு உலகளவில் பெருமை சேர்த்திருக்கிறது. அனைத்து வீரர்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். இந்திய வீரர்களின் கடுமையான பயிற்சி மற்றும் முயற்சியாலும் இந்த சாதனையை அடைந்துள்ளனர். தொடர்ந்து 3வது முறையாக உலக கோப்பையை வென்று சரித்திர சாதனை புரிந்துள்ார்கள். வெற்றிக்கு பாடுப்பட்ட அனைத்து வீரர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள். வருங்காலங்களிலும் இந்திய கிரிக்கெட் அணி பல்வேறு சாதனைகளை புரிந்து வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்: ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் வெற்றிப்பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.
