கட்சியை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை விழுங்கப் பார்க்கிறது பாஜ: லட்சக்கணக்கானோர் திரண்ட திருச்சி திமுக மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

 

திருச்சி: கட்சியை டெல்லியில் அடமானம் வைத்து விட்டார் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை விழுங்கப் பார்க்கிறது பாஜ என்று லட்சக்கணக்கானோர் திரண்ட திருச்சி திமுக மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். திருச்சி மாவட்டம் சிறுகனூரில் “ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’’ என்ற தலைப்பில் நிர்வாகிகள் சந்திப்பு சிறப்பு மாநாடு நேற்று மாலை நடந்தது. மாநிலம் முழுவதுமிருந்து பஸ், வேன், கார்களில் நேற்று காலை முதல் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள், நிர்வாகிகள் குவிந்ததால் திருச்சி நகரமே குலுங்கியது.

இதனைத்தொடர்ந்து பிற்பகல் 3 மணியளவில் இசை நிகழ்ச்சியுடன் மாநாடு துவங்கியது. மாலை 6.30 மணிக்கு மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள 110 அடி உயர கொடிகம்பத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கட்சி கொடி ஏற்றினார். பின்னர் மேடையின் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள அரை ‘‘கி.மீ நீள ரேம்பில்’’ நடந்து வந்த முதல்வர், திரண்டு இருந்த தொண்டர்களின் வரவேற்பை பெற்று கொண்டு மேடைக்கு சென்றார்.

மாநாட்டிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து பேசியதாவது: இனிமேல் தொடர்ந்து நாம் அடித்து ஆட வேண்டும். இன்றைக்கு நாம் முழங்கும், “ஸ்டாலின் தொடரட்டும் – தமிழ்நாடு வெல்லட்டும்”… இது ஏதோ, தனிப்பட்ட ஸ்டாலினுக்கான முழக்கம் அல்ல, இது நம்மை எல்லாம் உருவாக்கிய, திராவிட முன்னேற்ற கழகம் தொடரட்டும் என்பதுதான் இதன் உண்மையான பொருள். ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து, உங்களில் ஒருவனான என்னுடைய தலைமையில் ஆறாவது முறையாக ஆட்சிக்கு வந்தோம். இப்போது ஏழாவது முறை மட்டுமல்ல, இனி எந்நாளும் கழகம்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று சூளுரைக்கத்தான் இங்கு கூடியிருக்கிறோம். இதுதான் நம்முடைய கடமை அனைவரின் பெரும் கடமை. நம்முடைய தமிழினத்தை காக்க தகுதியும், திறமையும், உழைப்பும் கொண்ட ஒரே படை நம்முடைய கருப்பு சிவப்பு படைதான்.

நமக்கென்று மாபெரும் வரலாறு இருக்கிறது. நமக்கென்று ஒரு லெகசி இருக்கிறது. தமிழை காத்தவர்கள் நாம் தாய்த்தமிழ்நாட்டிற்கு பெயர் வைத்தவர்கள் நாம் நம்முடைய மாநிலத்தை எல்லா நிலையிலும் உயர்த்தியவர்கள் நாம் இப்போது கூட தமிழ் மண்ணுக்கு காவல் அரணாக இருப்பவர்கள் நாம் தான் தமிழ்நாடு. நம்மை நம்பித்தான் இருக்கிறது.

நாமும் தமிழ்நாட்டை நம்பித்தான் இருக்கிறோம். கடந்த 2021ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு, இதே திருச்சியில், இதே இடத்தில் ஏழு இலக்குகளை உறுதி மொழிகளாக நான் அறிவித்தேன். அதில் முதல் இலக்கு வளரும் வாய்ப்புகள், வளமான தமிழ்நாடு, இரண்டாவது இலக்கு மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி, மூன்றாவது இலக்கு குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர், நான்காவது இலக்கு அனைவருக்கும் உயர்தரக் கல்வி, உயர்ந்த மருத்துவம், ஐந்தாவது இலக்கு எழில்மிகு மாநகரங்களின் மாநிலம், ஆறாவது இலக்கு உயர்தர ஊரக கட்டமைப்பு, உயர்ந்த வாழ்க்கைத் தரம், ஏழாவது இலக்கு அனைவருக்கும் அனைத்துமான தமிழ்நாடு.

நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறேன். இந்த ஏழு இலக்குகளையும் நம்முடைய ஐந்தாண்டு ஆட்சியின் திட்டங்களால் நிறைவேற்றி காட்டியிருக்கிறோம். அதனால் தான் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இதையெல்லாம், நம்முடைய எதிரிகளே, இன்றைக்கு மனதிற்குள் ஒப்புக்கொள்வார்கள். யாராலும் மறைக்க முடியாத, மறுக்க முடியாத உண்மை. இது தமிழ்நாட்டை தொடர்ந்து புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசுகூட, நம்பர் ஒன் மாநிலம் – தமிழ்நாடு’ என்று சொல்கிறார்கள். உலக பத்திரிகைகளே, ‘சூப்பர்ஸ்டார் ஸ்டேட் தமிழ்நாடு’ என்று பாராட்டுகிறார்கள். அந்த அளவிற்கு நாம் கெத்தாக முன்னேறி இருக்கிறோம்.

எல்லாவற்றிலும் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு ஏன், பல மடங்கு சாதனைகள் படைத்திருக்கிறோம், இதுதான் வளர்ச்சி. அதனால்தான், வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 14 ஆண்டுகள் கழித்து, நம்முடைய ஆட்சியில் 11.19 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை நம்முடைய மாநிலம் அடைந்திருக்கிறது.

நீங்கள் பிரசாரத்திற்கு செல்லும்போது யாரைக் கேட்டாலும், அவர்கள் நம்முடைய அரசின் திட்டங்களில் பயனாளியாக இருப்பார்கள் நம்முடைய அரசின் திட்டங்களின் பயனாளிகள் வாக்களித்தாலே போதும். நாம்தான் ‘புல் ஸ்வீப்’ பண்ணுவோம் முழு வெற்றி அடைவோம். அதை உறுதிசெய்ய வேண்டியதுதான், உங்களின் பணி நாம் இவ்வளவையும் செய்துவிட்டு, மக்களிடம் வாக்கு கேட்கிறோம்.

நம்முடைய ஆட்சியில் நிறைவேற்றி இருக்கின்ற திட்டங்களை இனி யாராலும் மாற்ற முடியாது எவராலும் நிறுத்த முடியாது.
யோசித்து பாருங்கள், நாம் வழங்கிய மகளிர் உரிமை தொகையை யாராலும் நிறுத்த முடியுமா? முடியாது. அப்படி அவர்கள் நினைத்தாலே, அவர்களின் வீட்டு பெண்களே அவர்களின் கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள். வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிடுவார்கள். அதனால்தான் இப்போது அதிகப்படுத்தி அறிவிக்கிறார்கள்.

நாம் இவ்வளவையும் செய்துவிட்டு, மக்களிடம் வாக்கு கேட்கிறோம். ஆனால், அதிமுக கூட்டணி… சாரி… சாரி… அப்படி சொன்னால், மோடியும் – அமித்ஷாவும் கோபித்து கொள்வார்கள். என்டிஏ கூட்டணி என்று சொல்ல வேண்டும். கூட்டணிக்கு பெயர் வைக்க கூட முடியாத நிலையில்தான், இன்றைக்கு அதிமுக இருக்கிறது. சரி அவர்கள் சொல்வது போன்று, அந்த என்டிஏ கூட்டணி தமிழ்நாட்டிற்கு என்ன செய்திருக்கிறது?

கடந்த 5 ஆண்டுகளில், நமக்கு தர வேண்டிய கல்வி நிதி, ஜல் ஜீவன் திட்ட நிதி, நூறு நாள் வேலைத்திட்ட நிதி, பேரிடர் நிவாரண நிதி என்று நாம் கேட்ட எதையும் தரவில்லை மாநிலத்திற்கான சிறப்பு திட்டங்களையும் தரவில்லை ஏன், கோவை, மதுரை, திருச்சி மெட்ரோ உள்ளிட்ட எந்த உட்கட்டமைப்பு திட்டங்களுக்கும் அனுமதி தரவில்லை. பாஜ தமிழ்நாட்டுக்கு தந்ததெல்லாம் என்ன தெரியுமா? ஆளுநர் மூலமாக குடைச்சல், மாணவர்களின் உயிரோடு விளையாடும் நீட் தேர்வு, இந்தி திணிப்பு, மிரட்டி பார்க்க ரெய்டுகள் இப்படிப்பட்ட ஆட்சிதான். பிரதமர் மோடி சொல்லும் என்டிஏ ஆட்சி தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் செய்யாத இவர்கள்தான், நம்மை எதிர்த்து நிற்கிறார்கள்.

எந்த நம்பிக்கையில் நீங்கள் எல்லாம் தமிழ்நாட்டுக்கு வருகிறீர்கள்? தமிழ்நாடு கேட்பதற்கெல்லாம், ‘நோ’ சொல்லும் என்டிஏ-வுக்கு, தமிழ்நாடும் ‘நோ’தான் சொல்லும். இங்கே உங்களுக்கு எப்போதும் ‘நோ எண்ட்ரி’ தான் உங்கள் டப்பா எஞ்சினுக்கு தமிழ்நாடு எப்போதுமே, ‘நோ என்ட்ரி’-தான் சொல்லும்.

சில நாட்களுக்கு முன்பு நான் சொன்னேன். இந்த தேர்தல், தமிழ்நாடு vs என்டிஏ இன்னும் சொன்னால், தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என்று பார்க்கும் தேர்தல் என்று சொன்னேன். உடனே நம்முடைய எதிரிகள் என்ன சொன்னார்கள்? இது சட்டமன்றத்துக்கு நடக்கும் தேர்தல்தானே? இதை ஏன் தமிழ்நாடு Vs என்டிஏ என்று திமுக சொல்கிறது? தமிழ்நாட்டுக்கும், டெல்லிக்குமான தேர்தல் என்று ஏன் ஸ்டாலின் சொல்கிறார் என்று கேட்கிறார்கள்.

திமுக என்கிற மாபெரும் இயக்கம், தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களிடம் வரும் கட்சியல்ல. மக்களின் உரிமைகளுக்காக எப்போதும் களத்தில் நிற்கும் கட்சி. எங்களுக்கு தெரியும்… தமிழ்நாட்டின், தமிழ் மொழியின், தமிழ் பண்பாட்டின், உண்மையான எதிரி யார் என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும்… அந்த எதிரியை எதிர்க்கும் தெம்பும், திராணியும் கொண்ட ஒரே இயக்கம் தி.மு.க என்பது மக்களுக்கும் நன்றாக தெரியும்.

அதிமுக என்கிற முகமூடியை போட்டு கொண்டு வந்தால், எங்களுடைய தமிழ்நாட்டு மக்களுக்கு உங்களை அடையாளம் தெரியாமல் போய்விடுமா? உங்களின் முகத்திரையை கிழித்து, தமிழ்நாட்டு மக்களிடம் நாங்கள் அம்பலப்படுத்துவோம். தமிழ்நாட்டை எப்படியாவது நம்மிடம் இருந்து, விழுங்கிடலாம் என்று நினைக்கிறது காவி கூட்டம். எங்கள் கருப்பு, சிவப்பு பட்டாளம் இருக்கிறவரை அது நடக்கவே நடக்காது. உங்கள் அப்பனே வந்தாலும் நடக்காது. நடக்க விடமாட்டோம்.

இது அவர்களுக்கும் நன்றாக தெரியும். அதனால்தான், அதிமுக என்ற கட்சியை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குகிறார்கள். அரசியலில் நேர் எதிராக இருந்தாலும், அதிமுக தொண்டர்கள் மீது நான் உண்மையாகவே பரிதாபப்படுகிறேன். அவர்களுடைய உணர்வுக்கு மாறாக கட்சியை கொண்டு போய் டெல்லியில் அடமானம் வைத்துவிட்டார் பழனிசாமி. தன் சொந்த நலனுக்காக, சுயலாபத்துக்காக, எப்படியாவது முதலமைச்சராக ஆக வேண்டும் என்ற நப்பாசையில், பழனிசாமி அடிமையாகக் கிடக்கிறார். அவரை வைத்து, ஒட்டுமொத்த அதிமுகவையும் அழிக்கும் வேலையை பாஜ செய்து கொண்டிருக்கிறது.

இப்போது கூட பீகாரில், என்ன நடக்கிறது என்று நாடே பார்க்கிறதே பீகார் மாநிலத்தில் இதுவரை பாஜ முதலமைச்சர் இருந்ததே கிடையாது. நிதிஷ்குமார் அவர்களை முன்னிறுத்தி தேர்தலில் ஜெயித்துவிட்டு, இப்போது காரியம் ஆனதும் அவரை ஓரங்கட்டிவிட்டு, பாஜ முதலமைச்சரை உள்ளே கொண்டு வரப்போகிறார்கள். இதையேதான் தமிழ்நாட்டிலும் செய்யலாம் என்று முயற்சி செய்கிறார்கள். நான் அடித்து சொல்வேன், சேலஞ்ச் செய்து சொல்வேன்.

இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும், எங்கள் திமுகவும் இருக்கும் வரை, பாஜகவால் தமிழ்நாட்டை ஆள முடியவே முடியாது. நீங்கள் அந்தர் பல்டி அடித்தாலும், என்ன முகமூடி போட்டு கொண்டு வந்தாலும், புதிது புதிதாக யாரை அழைத்து கொண்டு வந்தாலும், எத்தனை ஏவல் அமைப்புகளை வைத்து மிரட்டிப் பார்த்தாலும், தமிழ்நாடு எப்போதுமே உங்களுக்கு Out Of Control-தான்.

நாங்கள் பார்க்காத படையெடுப்பா? திமுக பார்க்காத மிரட்டலா? நீங்கள் இந்தியா மேப்பில் இருக்கும் எந்த மாநிலத்தின் மீது வேண்டுமானாலும், காவி அடித்திருக்கலாம் ஆனால், தமிழ்நாட்டில் உங்கள் பாச்சா பலிக்கவே பலிக்காது. இங்கே எப்போதுமே நாங்கள்தான் எங்கள் மண்ணில், நாங்கள்தான் ஜெயிப்போம், நாங்கள் மட்டும்தான் ஜெயிப்போம்.

இந்த ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சிதான், சொன்னதை செய்யும், சொல்லாததையும் செய்யும் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். அதனால், தேர்தலுக்காக உழைக்க, நான் ரெடி… நீங்கள் ரெடியா? நம் மண், மொழி, மக்களை காக்க, நான் ரெடி… நீங்கள் ரெடியா?… திராவிட மாடல் 2.0விற்கு, நான் ரெடி… நீங்கள் ரெடியா?.. நம்முடைய வெற்றி, கழகத்தின் வெற்றி மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வெற்றி. அதை உணர்ந்து நீங்கள் உழைக்க வேண்டும். ஏழாவது முறையும் நாம்தான், இனி எப்போதும் நாம்தான். திருச்சியின் எழுச்சி தமிழ்நாடெங்கும் பரவட்டும்… திராவிட மாடல் நல்லாட்சி தொடரட்டும்… தமிழ்நாடு வெல்லட்டும்.. மீண்டும் வெல்வோம்… மீண்டும் மீண்டும் வெல்வோம்… வெல்வோம் ஒன்றாக. நன்றி வணக்கம். இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், ஐ.பெரிசாமி, வெள்ளக்கோயில் சாமிநாதன், கீதா ஜீவன், பெரியகருப்பன், ரகுபதி, எம்ஆர்கே. பன்னீர்செல்வம், எ.வ. வேலு, கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முத்துசாமி, தா.மோ.அன்பரசன், அனிதா ராதாகிருஷ்ணன், மூர்த்தி, சக்கரபாணி, சேகர்பாபு, நாசர், டிஆர்பி.ராஜா, சிவசங்கர், மெய்யநாதன், மனோதங்கராஜ், கோவி.செழியன், எம்பிக்கள் கனிமொழி, திருச்சி சிவா, அருண்நேரு, முரசொலி, துணை பொது செயலாளர் ஆ.ராசா, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

* கடைசி பந்தில் வின்னிங் ஷாட்

‘‘திமுக வரலாற்றில் எத்தனையோ திருப்பு முனைகளுக்கு அடித்தளமிட்ட, தீரர்கள் கோட்டமாம் திருச்சியில் இந்த மாநில மாநாட்டை நடத்துகிறோம். இந்த மாநாடு எதற்கு என்று நிறைய பேர் கேட்கிறார்கள் ஒரு கிரிக்கெட்டில், முதல் பந்தில் இருந்தே ரன் அடிப்பது முக்கியம் தான்… அதேசமயம், இறுதி ஓவர்களில் அடித்து ஆடி, கடைசி பந்தில் வின்னிங் ஷாட்டாக சிக்ஸர் அடித்து ஜெயிப்பதுதான் ஒரு கிராண்ட் பினிஷிங்காக இருக்கும். அப்படிப்பட்ட வெற்றியை, 2026ல் நாம் பெறுவதற்குதான் இந்த மாநாடு’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

* திருச்சியில் 7வது மாநாடு

திமுக இதுவரை நடத்தியுள்ள 11 மாநாடுகளில் 6 திருச்சியில் நடந்துள்ளது. இப்போது 12வது மாநாடும் திருச்சியில் நடக்கிறது. அண்ணா, கலைஞர் தலைமையில் இதுவரை 10 மாநாடுகள் நடந்து உள்ளன. கடந்த 2021ம் ஆண்டு சிறுகனூரில் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல் மாநாடு (11வது மாநாடு) நடந்தது. அதே இடத்தில் 2வது முறையாக மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று 12வது மாநாடு நடந்தது.

இந்திய அளவில் டிரெண்டிங்

ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்ற தலைப்பில் நடக்கும் மாநாடு மற்றும், திமுகவின் துறை சார்ந்த சாதனைகள் சமூக வலைதளங்களில் வைரலானது. வருகிறது. அரசியல் வரலாற்றில் முதல் முறையாக 25,000 முகநூல் பக்கத்தில் இந்த மாநாடு சார்ந்த தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. ‘பயர்வால்’ என பெயரிடப்பட்ட தனி கூடாரத்தில் இந்த பணிகள் நடைபெற்றது. இந்திய அளவில் இது 3ம் இடத்தில் பிரபலமாகி உள்ளது என்று ஐடிவிங் செயலாளரும், தொழில்துறை அமைச்சருமான டிஆர்பி ராஜா கூறினார்.

* மற்ற கட்சிகள் இன்ஸ்டாமென்டில் தேர்தல் அறிக்கை

‘‘விரைவில், விரிவான தேர்தல் அறிக்கை தங்கை கனிமொழி தலைமையில் தயாராகிக் கொண்டிருக்கிறது. விரைவில் வெளியிடப் போகிறோம். சமீப காலமாக கவனித்தீர்களா, மற்ற அரசியல் கட்சிகள் எல்லாம், இன்ஸ்டால்மென்ட்டில் தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்கள். அதிலும் என்ன அறிவிக்கிறார்கள்? திராவிட மாடல் அரசு சார்பில், நாம் நிறைவேற்றி கொண்டிருக்கும் திட்டங்களையே, டாப் அப் செய்து, காப்பி அடித்து அறிவிக்கிறார்கள். அவ்வளவுதான் ஏனென்றால், அவர்களுக்கும் வேறு வழியில்லை’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

* காலையிலேயே சுடச்சுட பிரியாணி

மாநாட்டில் அசைவ பிரியர்களுக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி மற்றும் சைவ பிரியர்களுக்கு வெஜிடபிள் பிரியாணி, குஸ்கா தயாரிக்கப்பட்டது. சுடச்சுட மட்டன் பிரியாணி, நாவூறும் சிக்கன் வறுவல் மற்றும் சைவ பிரியாணி ஆகியவை வழங்கப்பட்டன. தாகம் தீர்க்க குடிநீர் பாட்டில்களும் விநியோகம் செய்யப்பட்டன. நேற்றுமுன்தினம் 11 மணியளவில் தொடங்கிய இந்த பணியில், 3000க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் மற்றும் பணியாளர்கள் இரவு பகலாக ஈடுபட்டனர்.

உணவு தயாரிப்பு பணிகள் தடையின்றி நடைபெற, சமையல் கூடம் மூன்று தனித்தனி பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்தன. சிறுகனூர் மாநாட்டு திடல் முழுவதும் மட்டன் பிரியாணி மற்றும் வறுவலின் மணம் கமகமவென பரவி, தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து, தயார் செய்யப்பட்ட உணவுகளை பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து, எவ்வித நெரிசலுமின்றி விநியோகம் செய்யும் பணியில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் தன்னார்வலர்களாக ஈடுபட்டனர்.

Related Stories: