ரூ.114 கோடியில் பெருங்குடி, எஸ்ஆர்பி டூல்ஸ் சந்திப்புகளில் புதிய மேம்பாலங்கள்: தனியார் நிறுவனத்துடன் மெட்ரோ நிர்வாகம் ஒப்பந்தம்

 

சென்னை: பெருங்குடி மற்றும் எஸ்ஆர்பி டூல்ஸ் சந்திப்புகளில் மேம்பாலங்கள் அமைப்பதற்கு தனியார் நிறுவனத்திற்கு ரூ.113.80 கோடியில் மெட்ரோ நிறுவனம் ஒப்பந்தம் வழங்கியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பெருங்குடி சந்திப்பு மற்றும் எஸ்ஆர்பி டூல்ஸ் சந்திப்புகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ.113.80 கோடி மதிப்பீட்டில் மேம்பாலங்கள் கட்டும் ஒப்பந்தத்தை ராஜ்குமார் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. சேவை சாலைகள், மின்சாரப் பணிகள், வடிகால் அமைப்புகள் மற்றும் இதர உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய மேம்பாலங்களை வடிவமைத்துக் கட்டுவதற்காக இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. பணி தொடங்கப்பட்ட நாளிலிருந்து 18 மாதங்களுக்குள் இதை முடித்திடத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஓஎம்ஆர் பகுதியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டு வரும் உயர்மட்ட மெட்ரோ ரயில் பணிகள் மற்றும் திட்ட அமலாக்கத்தில் தேவைப்படும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த மேம்பாலங்களை அமைக்கும் பணியை மாநில நெடுஞ்சாலைத் துறை, வைப்புத்தொகை அடிப்படையில் மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. பெருங்குடி சந்திப்பில் அமையவுள்ள இந்த மேம்பாலமானது, எம்.ஜி.ஆர் பிரதான சாலையிலிருந்து ஒரு பிரத்யேகச் சாய்வுப் பாதையை கொண்டிருக்கும்.

இது சோழிங்கநல்லூர் நோக்கிச் செல்லும் வாகனங்கள் தடையின்றி வலதுபுறம் திரும்புவதற்கு வழிவகை செய்யும். அதேபோல், எஸ்ஆர்பி டூல்ஸ் சந்திப்பில் அமையவுள்ள இந்த மேம்பாலம், ஓஎம்ஆரிலிருந்து வேளச்சேரி-தரமணி இணைப்புச் சாலையை நோக்கிச் செல்லும் வாகனங்கள் எவ்வித தடையுமின்றி வலதுபுறம் திரும்புவதற்கு வழிவகை செய்யும். இதன் மூலம் அந்தச் சந்திப்பில் நிலவும் போக்குவரத்து சீராகும். இந்த மேம்பாலப் பணிகள் நிறைவடைந்தவுடன், ஓஎம்ஆர் சாலையில் உள்ள இரண்டு முக்கிய போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்கள் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது போக்குவரத்தைச் சீரமைப்பதோடு வேளச்சேரி, தரமணி, பெருங்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஐடி காரிடார் பகுதிகளுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்தும். இந்த திட்டம் தினசரி பயணிக்கும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகளுக்குப் பயனளிப்பதோடு, சென்னையின் மிகவும் பரபரப்பான சாலைகளில் ஒன்றான இப்பகுதியில் வாகனங்கள் மிகவும் சீராகவும், பாதுகாப்பாகவும் செல்வதற்கு வழிவகுக்கும்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் மற்றும் நிதி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில், சென்னை மெட்ரோ நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அர்ச்சுனன் மற்றும் எம்.ராஜ்குமார் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜ்குமார் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

Related Stories: