சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் நவீன அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தை நிர்வகிப்பதற்கும், இயக்குவதற்குமான இ-ஏலத்தை சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பயணிகளின் வசதிக்காக இரண்டு பிரமாண்டமான ‘மல்டி-பங்க்ஸ்னல் காம்ப்ளக்ஸ்’ கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. காந்தி-இர்வின் சாலை மற்றும் பூந்தமல்லி சாலை ஆகிய இரு புறங்களிலும் அமைந்துள்ள இந்த கட்டிடங்களில் வணிக அங்காடிகள் மற்றும் நவீன அடுக்குமாடி வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது, காந்தி-இர்வின் சாலைப் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் 2வது, 3வது மற்றும் 4வது தளங்களில் வாகன நிறுத்துமிட வசதிகள் முழுமையாக தயார் நிலையில் உள்ளன. இந்த நவீன வாகன நிறுத்துமிடத்தை நிர்வகிப்பதற்கும், இயக்குவதற்கும் தகுதியான நிறுவனங்களைத் தேர்வு செய்ய சென்னை கோட்டம் இ-ஏலம் (e-Auction) மூலம் விண்ணப்பங்களை வரவேற்கிறது.
இந்த ஒப்பந்தத்தைப் பெறும் நிறுவனம், வாகனங்களின் நுழைவு மற்றும் வெளியேற்றத்தை முறைப்படுத்துதல், வாகனங்களை வரிசையாக நிறுத்துவதை உறுதி செய்தல் மற்றும் அப்பகுதியை தூய்மையாகப் பராமரித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும். தேர்வு செய்யப்படும் ஏலதாரர், வாகனங்களை நிறுத்துவதுடன் மட்டுமல்லாமல், ஒதுக்கப்பட்ட அந்த அடுக்குமாடி தளங்களில் கூடுதல் சேவைகளை வழங்கவும் அனுமதிக்கப்படுவர்.
இதன்படி, ‘பயன்படுத்தி கட்டணம் செலுத்தும்’ (Pay & Use) கழிப்பிட வசதிகள், மின்சார வாகனங்களுக்கான (EV) சார்ஜிங் மையங்கள் மற்றும் பயணிகளுக்கு தேவையான இதர அத்தியாவசியச் சேவைகளை அங்கு வழங்கலாம். இத்தகைய சேவைகளுக்கான கட்டணங்கள் சந்தை விலையை ஒட்டியே இருக்க வேண்டும்; மேலும், இவை ரயில்வே நிர்வாகத்தின் முன் ஒப்புதலுக்கு உட்பட்டதாகும்.
மேலும் இந்த நிறுத்துமிடத்திற்கான வாகனப் போக்குவரத்துப் பாதையானது, ஏலப் பட்டியலில் (e-auction catalogue) குறிப்பிடப்பட்டுள்ள வரைபடத்தின்படி அமையும்; எனினும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நிலைய மறுசீரமைப்புப் பணிகளின் போது, பயணிகளின் வசதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக இதில் தேவையான மாற்றங்கள் செய்யப்படலாம்.
இந்த ஏல நடைமுறையானது முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் www.ireps.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரும் 20ம் தேதி மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ள ஏலதாரர்கள் இதுகுறித்த விரிவான விவரங்களை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் உள்ள 2வது தளத்தில் உள்ள வணிகப் பிரிவில் கலந்துகொள்ளலாம்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
