அதிமுக எம்பி தம்பிதுரைக்கு சொந்தமான பல்கலை ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்க நடவடிக்கை: திருவள்ளூர் கலெக்டருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரைக்கு சொந்தமான பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரையின் செயின்ட் பீட்டர்ஸ் கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் சென்னையை அடுத்த கோனம்பேடு கிராமத்தில் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து, மின்சார துணை நிலையம் மற்றும் தனியார் பாதை, மாணவ, மாணவிகள் தங்கும் விடுதி கட்டி உள்ளதாக கூறி கோனம்பேடு கிராம பொதுநல சங்கத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கிராமத்திற்கு அருகிலுள்ள ஆவடி நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாததால் செயின்ட் பீட்டர்ஸ் கல்வி நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்டு நகராட்சி பள்ளியின் வசதிக்காக வழங்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.சுரேந்தர் அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் புருஷோத்தமன் ஆஜரானார். அப்போது, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தரப்பில் சர்வே அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில் சுற்றுச்சுவர், கல்லூரி கட்டிடம் என சுமார் 2476 சதுர மீட்டர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட வருவாய் அலுவலர் மற்றும் ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் 12 வாரத்திற்குள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை அகற்றுமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டனர்.

Related Stories: