பெண் ஊழியருக்கு ஊதியத்துடன் மாதவிடாய் விடுப்பு கோரி மனு: அரசின் நிலைப்பாடு குறித்து பதிலளிக்க உத்தரவு

 

மதுரை: தமிழ்நாட்டில் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க கோரிய வழக்கில் அரசின் நிலைப்பாடு குறித்து பதிலளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த நர்மதா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணி புரியும் பெண் ஊழியர்கள் பலர் மாதவிடாய் காலங்களில் முறையான விடுமுறை வசதி இல்லாததால் உடல் மற்றும் மனரீதியாக பாதிக்கப்படுகின்றனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு, தமிழ்நாட்டில் தற்போது பெண் ஊழியர்களுக்கு எனத் தனிப்பட்ட ‘மாதவிடாய் விடுமுறை கொள்கை’ எதுவும் இல்லை என்று அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

மாதவிடாய் காலங்களில் உரிய விடுமுறை மறுக்கப்படுவது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை மற்றும் சமத்துவ உரிமை ஆகியவற்றிற்கு எதிரானது. கர்நாடகா, பீகார், ஒடிசா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் மாதவிடாய் விடுமுறை தொடர்பான கொள்கைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. 20.10.2025ல் பெண்கள் எதிர்கொள்ளும் உடல்நல பிரச்னைகள், ஊதிய இழப்பு மற்றும் பணியிட சிரமங்கள் குறித்து விளக்கி தமிழ்நாடு அரசுக்கு விரிவான மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை.

அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை வழங்கத் தனி கொள்கையை தமிழ்நாடு அரசு உருவாக்கவும், தனியார் நிறுவனங்களும் தங்கள் பெண் ஊழியர்களுக்கு இத்தகைய விடுமுறையை வழங்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிடுமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் என்.சதிஷ்குமார், எம்.ஜோதிராமன் ஆகியோர், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து மகளிர் உரிமை துறை முதன்மைச் செயலர், சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ஆகியோர் தரப்பில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை ஏப். 2க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: