ஈரான் – இஸ்ரேல் போரால் விலை அதிகரித்த நிலையில் வர்த்தக சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு: ஓட்டல், டீக்கடைகள் மூடப்படும் அபாயம்; தொழிற்சாலை பயன்பாட்டுக்கும் சிக்கல்

சென்னை: சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக வர்த்தக காஸ் சிலிண்டர்கள் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், சப்ளை பாதிப்பால் இவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக டீக்கடைகள், ஓட்டல்கள், தொழிற்சாலைகள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய பொருட்கள் விலைவாசி கடுமையாக உயரக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஈரானுக்கும் இடையேயான இந்த போர் காரணமாக சர்வதேச வர்த்தகத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரான், தெஹ்ரான், அபுதாபி, சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ளநிலையில் ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது, ஈரான் நிர்வகித்து வரும் ஹார்முஸ் நீரிணை வழியாக உலக நாடுகளின் 20 சதவீத கச்சா எண்ணெய் செல்கிறது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உடனான போர் பதற்றத்தால் இந்த நீரிணையை ஈரான் மூடிவிட்டது. இதன் காரணமாக, கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. மேலும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. சமையல் காஸ் விநியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

போர் பதற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை தொடர்ந்து, வீடு மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இரண்டு நாட்களுக்கு முன் உயர்த்தப்பட்டது. அதன்படி, வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை 60 ரூபாயும், வணிக பயன்பட்டிற்கான சிலிண்டரின் விலை 115 ரூபாயும் அதிகரித்துள்ளது. இது குடும்பத்தலைவிகள், நடுத்தர மக்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலிண்டர் விலை உயர்வு அறிவிப்பை தொடர்ந்து, சென்னையில் ரூ.1,929க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.114.50 உயர்ந்து, ரூ.2,043.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.868.50க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வீட்டு சமையல் காஸ் சிலிண்டர், ரூ.60 உயர்ந்து ரூ.928.50 ஆக அதிகரித்துள்ளது.

வர்த்தக சிலிண்டர் விலை டெல்லியில் ரூ.1,883, மும்பையில் ரூ.1,835, கொல்கத்தாவில் ரூ.1.990 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மும்பையில் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.114.5 அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு நடுத்தர குடும்பங்கள் மற்றும் சிறு உணவக உரிமையாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வு அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கும் வழிவகுக்கும் என்பதால் சாமானிய மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதற்கிடையே போர் காரணமாக, இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுவதால், சிலிண்டர் விலை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சத்தில், பொதுமக்கள் தேவைக்கு அதிகமாக சிலிண்டர்களை வாங்கி வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, கொல்கத்தாவில் நாளொன்றுக்கு சராசரியாக ஒரு லட்சம் சிலிண்டர்கள் முன்பதிவு செய்யப்படம் இடத்தில், தற்போது ஒன்றரை லட்சம் சிலிண்டர்கள் முன்பதிவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அதேபோன்று நாடு முழுவதும் கடந்த 5, 6 நாட்களில் எல்பிஜி முன்பதிவுகள் 15% முதல் 20% வரை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனால், நாடு முழுவதும் பல பகுதிகளில் சமையல் எரிவாயு முன்பதிவு செய்வதற்கு எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கனவே கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

வீட்டு சிலிண்டர்களை பொறுத்தவரை இரண்டு சிலிண்டர்கள் வைத்துள்ளவர்கள் தற்போது அதை பற்றி கவலைப்படவில்லை. அதே நேரம் ஓட்டல்கள், தொழிற்சாலைகள் என வர்த்தக நிறுவனங்கள் தான் காஸ் சிலிண்டர் பெறுவதற்கு முட்டி மோதி வருகின்றன. ஒரே நாளில் இரண்டு சிலிண்டர் பயன்படுத்தக்கூடிய நிறுவனங்கள் எல்லாம் தற்போது சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அலைமோதி வருகின்றன. சிலர் கூடுதல் விலை கொடுத்து வாங்குவதாகவும் கூறப்படுகிறது. கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஒட்டல்களில் டீ, காபி உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை தாறுமாறாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஓட்டல்கள், டீ கடைகள் மூடும் அபாயமுமு் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் சிஎன்ஜி கேஸ் சிலிண்டர்களுக்கும் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான ஆட்டோக்கள் தற்போது சிஎன்ஜி கேசை தான் பயன்படுத்தி வருகின்றனர். சிஎன்ஜி நிலைங்களில் மூடப்பட்டு வருவதால் ஆட்டோக்கள், கார் உள்ளிட்ட வாகனங்களை ஓட்ட முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதே நிலமை தான் தொழிற்சாலைகளுக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தொழிற்சாலைகள் மூடப்பட்டால் வேலை இழப்பும், வருமானம் பாதிப்பு ஏற்படும். இதனால் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்திக்கும். காஸ் தட்டுப்பாடு காரணமாக அனைத்து தரப்பு வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் அன்றாட நடவடிக்கைகள் முடக்கப்பட்டு வருகிற. எனவே ஒன்றிய இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு காஸ் தட்டுப்பாட்டு பிரச்னையை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களிடம் இருந்து இருந்து குரல் ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளது.

* டீக்கடை முதல் ஸ்டார் ஓட்டல் வரை… காஸ் சிலிண்டர் பயன்பாடு எவ்வளவு?
டீக்கடை முதல் ஸ்டார் ஓட்டல்கள் வரை எல்பிஜி காஸ் சிலிண்டர்தான் பிரதானமான எரிபொருளாக உள்ளது. பெரிய ஓட்டல்களில் மின்சார அடுப்பு பயன்பாடு இருந்தாலும், எல்பிஜி காஸ் சுமார் 80 சதவீதம் பயன்படுத்தப்படுகிறது. ஈரான் போர் காரணமாக எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஓட்டல்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. உணவகங்களுக்கு ஏற்பவும், அவை தயாரிக்கும் சாப்பாடு எண்ணிக்கைக்கு ஏற்பவும் நாள் ஒன்றுக்கு சிலிண்டர் பயன்பாடு தோராய கணக்கீடு வருமாறு:

* நாள் ஒன்றுக்கு தேவை எவ்வளவு?
டீக்கடை/ஓட்டல்கள் ஒரு நாள் எல்பிஜி 19 கிலோ சிலிண்டர்
டீக்கடைகள்/ஸ்நாக்ஸ் கடைகள் 8 முதல் 15 கிலோ 0.5-1 சிலிண்டர்கள்
சிறிய ஓட்டல்கள் 15 – 25 கிலோ 1-1.5 சிலிண்டர்கள்
நடுத்தர ஓட்டல்கள் 25 – 60 கிலோ 2-3 சிலிண்டர்கள்
பெரிய ஓட்டல்கள் 20-120 கிலோ 3 – 6 சிலிண்டர்கள்

நகரம் வாரியாக நாள் ஒன்றுக்கு
19 கிலோ வர்த்தக சிலிண்டரின் தேவை
1. டெல்லி என்சிஆர் 90,000 முதல் 1,10,000 வரை
2. மும்பை 80,000 முதல் 1,00,000 வரை
3. பெங்களூரு 55,000 முதல் 70,000 வரை
4. சென்னை 50,000 முதல் 65,000 வரை
5. கொல்கத்தா 45,000 முதல் 60,000 வரை
6. ஐதராபாத் 40,000 முதல் 55,000 வரை
7. புனே 30,000 முதல் 45,000 வரை
8. அகமதாபாத் 25,000 முதல் 40,000 வரை
9. சூரத் 25,000 முதல் 35,000 வரை
10. ஜெய்ப்பூர் 20,000 முதல் 30,000 வரை

வர்த்தக காஸ் பயன்படுத்தப்படும் இடங்கள்
* ரெஸ்டாரண்ட்
* ஓட்டல்கள்
* சாலையோர உணவகங்கள்
* டீக்கடைகள்
* பேக்கரி
* ஸ்வீட் கடைகள்
* கேட்டரிங் சேவை
* கோயில்களில் பிரசாதம் தயாரிக்கும் மடப்பள்ளிகள் ஜூவல்லரி மற்றும் சிறிய தொழிற்சாலைகள்டெக்ஸ்டைல்களில் டையிங் ஸ்டீமிங் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது.
* செராமிக்
* கண்ணாடி
* டைல்ஸ் உற்பத்தி தொழில் கெமிக்கல் மற்றும் மருந்து தொழிற்சாலைகள்.

Related Stories: