சென்னை: வடபழனியில் 30 வயதாகும் மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியாததால் ஆட்டோ டிரைவர் கிணற்றில் குதித்து தற்கொலை ெசய்து கொண்டார். துக்கம் தாளாமல் மகளும் தூக்கிட்டு தற்கொலை ெசய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வடபழனி கங்கையம்மன் கோயில் 1வது தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (57), ஆட்டோ டிரைவர். இவர் 2 மகள்கள் மற்றும் மனைவியுடன் வசித்து வந்தார். மூத்த மகள் பிருந்தா திருமணம் நடந்து அம்பத்தூரில் கணவருடன் வசித்து வருகிறார். இளைய மகள் பாக்கியா (30) படித்துவிட்டு வேலை கிடைக்காததால் வீட்டிலேயே உள்ளார். பாக்கியாவுக்கு திருமணம் செய்ய பல இடங்களில் கிருஷ்ணகுமார் வரன் பார்த்துள்ளார். ஆனால் சரியாக வரன் கிடைக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கிருஷ்ணமூர்த்தி மகளுக்கு 30 வயது தாண்டி போகிறது. இனி எப்படி திருமணம் நடக்கும் என்று கடுமையான மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சவாரி முடிந்து கிருஷ்ணமூர்த்தி கடந்த 7ம் தேதி மாலை 5 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளர். பிறகு 6 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே செல்லும்போது தனது செல்போனை வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றின் மீது வைத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. அதன் பிறகு கிருஷ்ணமூர்த்தி வீடு திரும்பவில்லை. இதனால் மனைவி மற்றும் மகள் தந்தையை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
பின்னர் மறுநாள் மாலை 7 மணிக்கு பாக்கியா தந்தை செல்போன் வைத்துவிட்டு சென்ற கிணற்றை பார்த்தபோது தண்ணீரில் தந்தை உடல் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் அழுதபடி வீட்டிற்கு ஓடி ெசன்று அறையில் தூங்கி கொண்டிருந்த தாய் வெளியே வராதபடி வெளிப்புறம் பூட்டிவிட்டு, சமையல் அறைக்கு சென்று சேலையால் தூக்கிட்டு கொண்டார். அதேநேரம் அவரது தாய் எழுந்து அறையில் இருந்து வெளியே வர முயன்ற போது, கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்ததால் மகள் பாக்கியாவை பலமுறை அழைத்தும் அவர் கதவை திறக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த அவரது தாய் உடனே மூத்த மகள் பிருந்தாவுக்கு போன் செய்து நடந்த சம்பவத்தை கூறி அழுதார். அதன்படி பிருந்தா மற்றும் அவரது கணவர் வந்து பார்த்த போது, சமையல் அறையில் பாக்கியா தூக்கிட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரது தாய் இருந்த அறையை திறந்து அவரை வெளியே மீட்டனர். பிறகு பாக்கியாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்த போது, டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். பின்னர் சம்பவம் குறித்து வடபழனி காவல்நிலையத்திற்கு பிருந்தா தகவல் அளித்தார்.
போலீசார் விரைந்து வந்து பாக்கியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதேநேரம் வீட்டிற்கு வந்த பிருந்தாவின் கணவர் சந்தேகமடைந்து வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றை டார்ச்லைட் அடித்து பார்த்தபோது கிருஷ்ணமூர்த்தி தண்ணீரில் இறந்த நிலையில் மிதந்ததை கண்டுபிடித்தார். உடனே வடபழனி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்படி, தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிருஷ்ணமூர்த்தியின் உடலை வெளியே எடுத்து பார்த்தபோது, அவர் கழுத்தில் சேலையால் தூக்கிட்டு நிலையில் இருந்தது.
கிருஷ்ணமூர்த்தி கிணற்று தூணில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்ற போது, கழுத்து இறுகி அவரது உடல் எடையை தாங்க முடியாமல் கழுத்து எலும்பு உடைந்த நிலையில், தண்ணீரில் விழுந்து இறந்து இருக்கலாம் என தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் கிருண்ஷமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் வடபழனி போலீசார் தந்தை மற்றும் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
